×

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை: ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

அரசு போக்குவரத்து கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பென்சனுடன் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் மிக குறைவான பென்சனையே அவர்கள் பெற்று வருகின்றனர். போக்குவரத்து கழக ஓய்வூதியர்களை தவிர, மற்ற அனைத்து அரசு தரப்பு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய பென்சன் வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 88 ஆயிரம் பேர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் ஏங்கியே விண்ணுலகம் சென்று விட்டனர். மேலும் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் மருத்துவ காப்பீடு, அதாவது முதல்வர் காப்பீடு திட்டம் கூட இல்லாமல் குறைவான பென்சனில் பொருளாதார வசதியின்றி மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் கடுமையான நோயுடன் போராடி வருகின்றனர்.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருவதோடு, நீதிமன்றம் வரை சென்றும் தற்போதைய திமுக அரசு செவிசாய்க்காமல் இருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.  காலம் தாழ்த்தாமல் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags : DMD ,Vijayakanth , Retired govt transport workers should be given hike in suspended dearness allowance immediately: DMD chief Vijayakanth
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக...