இன்று தை அமாவாசை; கடலில் புனித நீராடி ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இன்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஆடி, தை, மஹாளய அமாவாசை போன்ற நாட்களில் நாட்டிலுள்ள புண்ணிய ஸ்தலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவதை இந்துக்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வருகின்றனர்.

இன்று தை அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி இன்று அதிகாலை 2 மணி முதல் ராமேஸ்வரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வர துவங்கினர். அதிகாலை 4.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. பின் சுவாமி-அம்பாள் சன்னதியில் கால பூஜை நடைபெற்றது.

அதிகாலை 5 மணி முதல் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த ஏராளமான பக்தர்கள் தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்து தானம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். பின் கோயில் வடக்கு ரத வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்கள் நீராடி ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தனர்.

அமாவாசையை முன்னிட்டு இன்று பகல் 12 மணிக்கு ராமர், சீதாதேவி கருட வாகனத்தில் பஞ்சமூர்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரை மண்டகப்படிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்த வாரி உற்சவம் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு மேல் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள், ராமர் சீதாதேவி பஞ்ச மூர்த்திகளுடன் நான்குரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை துவங்கி நாள் முழுவதும் கோயில் நடை திறந்து வைக்கப்பட்டது. சூரிய உதயத்தை தொடர்ந்து அக்னிதீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தனர். அதன் பிறகு கடற்கரையில் உள்ள விநாயகர் கோயில் மற்றும் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை கடற்கரையில் சூரிய உதயம் பார்த்த குவிந்த சுற்றுலா பயணிகள், தொடர்ந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு மூலம் விவேகானந்தர் பாறையை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். கூட்டம் மிகுதியால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முதியவர் மரணம்: நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் (60), தர்ப்பணம் கொடுப்பதற்காக கன்னியாகுமரிக்கு நேற்று வந்திருந்தார். இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் முக்கடல் சங்கமம் பகுதியில் கடலில் குளிப்பதற்காக இறங்கியபோது படித்தரையில் கால் வழுக்கி விழுந்து இறந்தார். அவரது உடலை கடலோர பாதுகாப்பு போலீசார் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர், விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை, உஷ பூஜை, ஸ்ரீபலிபூஜை, நெய்வேத்திய பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.

இரவு 8.30 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி, அதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முறை மட்டுமே திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோயிலின் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி, அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தரிசனம்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இன்று தை அமாவாசை என்பதால் சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு தொலைதூர ஊர்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் வந்த பக்தர்கள் நள்ளிரவு முதல் தாணிப்பாறையில் வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய சென்றனர். இரவில் கோயிலில் தங்க அனுமதி இல்லை. ஓடைகளில் குளிக்க கூடாது என அறிவுரை கூறி பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிஷேகம் முடிந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒரு சில பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி: திருச்சியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருடமண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான மக்கள் குவிந்தனர். நீர்நிலைகளில் பூஜைகள் செய்து வழிபட்ட பொது மக்கள் பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட பிண்டங்களை காவிரி ஆற்றில் கரைத்து  புனித நீராடினர். தொடர்ந்து பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில்களுக்கு சென்று வழிபட்டனர்.

Related Stories: