தை அமாவாசையை முன்னிட்டு இன்று வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்

திருவள்ளூர்: தமிழ் மாதங்களில் அனைத்து மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிக்கின்றனர். இவ்வாறு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை சிறந்ததாகும். தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு படையலிட்டு சிறப்பு பூஜை செய்து தர்ப்பணம் செய்வார்கள்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில்  அமாவாசையான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றவும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும்  குவிந்தனர். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்பட தமிழகத்தின் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். கோயில் அருகில் உள்ள திருக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்கள் வரிசையாக  செல்வதற்கு போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். கோவில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள், பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: