×

ஆளுநரை மாற்ற சட்ட திருத்தம் அவசியம்: கி.வீரமணி பேச்சு

பெரம்பூர்: சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திமுக சட்டத்துறை சார்பில், அரசியலமைப்பு சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் என்ற தலைப்பில் சட்ட கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் என்.ஆர் இளங்கோ எம்பி, தி.க. தலைவர் கி. வீரமணி, ஓய்வுப்பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, திமுக சட்டத்துறை தலைவர் இரா. விடுதலை, திமுக சட்டத்துறை இணை செயலாளர் கேஎஸ்.ரவிச்சந்திரன், பரந்தாமன் எம்எல்ஏ பங்கேற்றனர்.

இதில் கி.வீரமணி பேசியதாவது;இந்தியாவின் அரசியலமைப்பின்படி குடியரசு தலைவர் முதல் ஊராட்சி மன்ற தலைவர் வரை அனைவரும் பதவி பிரமாணம் செய்து கொள்கின்றனர். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று சட்டமன்றத்தில் நிகழ்ந்துள்ளது. எதிர்க்கட்சிகள்தான் இதுவரை சட்டப் பேரவையில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். அல்லது சபாநாயகர் வெளியேற்றுவார்.

ஆனால் இந்த முறைதான் ஆளுநர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதுவரை இந்தியா வரலாற்றில் இது போன்ற ஒன்று நடந்ததே கிடையாது. பதவி பிரமாணம் என்பது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இவர்களை விட தனித்துவம் வாய்ந்ததுதான் ஆளுநர் பதவி ஏற்பு. அது அரசியலமைப்பு சட்டம் 159 சட்டப்பிரிவு தெளிவாக கூறுகிறது.

குடியரசு தலைவர் அரசுக்கு நேர்  விரோதமாக நடந்து கொண்டால் இம்பீச்மென்ட் இருக்கிறது. அதேபோல் ஆளுநர் அரசு நேர் விரோதமாக (போட்டி அரசாங்கம்) செயல்பட்டால் ஆளுநரை மாற்ற வேண்டும். இதற்கு சட்ட திருத்தம் அவசியம். இவ்வாறு வீரமணி பேசினார்.

மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை பேசும்போது, ‘’ உலகிலேயே  நீண்ட நெடிய அரசியலமைப்பு சட்டம் வைத்திருக்கிறோம், நம்முடைய அரசியல்  அமைப்பு சட்டம் என்பது 300க்கும் மேற்பட்ட சான்றோர்களால் இயற்றப்பட்டது. கூட்டாட்சி முறையில் ஒன்றிய, மாநில அரசுக்கு பாலமாக இருப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு பதவிதான் ஆளுநர் பதவி. ஆளுநர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம்  சட்டப்பிரிவு 163 தெளிவாக கூறியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் கூறிய அடிப்படை அம்சங்கள் கூட தெரியாத ஒருவர் தான் தற்போது தமிழ்நாட்டில் ஆளுநராக அமர்த்தி உள்ளனர்’ என்றார்.

இதில் முன்னாள் நீதிபதி சந்துரு பேசும்போது, ‘’மனித  உரிமைகளை மீறினால் எந்த அரசாக இருந்தாலும்  அதனை எதிர்த்து நாம் குரல்  கொடுக்க வேண்டும். அது ஆளுநராக இருந்தாலும் குடியரசு தலைவராக இருந்தாலும்  நாம் குரல் எழுப்ப வேண்டும் அதற்காகத்தான் நாம் சட்டம் படித்திருக்கிறோம். இதற்கு முன்பு  ஒரு ஆளுநர்  தமிழகத்தில் இருந்தார். அவர் மாநில அரசின் வளர்ச்சி பணிகளை பார்ப்பதற்காக கடலூரில் கழிப்பறை சரியாக கட்டியிருக்கிறார்களா என்று பார்வையிட்டார்’ என்றார்.

Tags : governor ,K. Veeramani , Amendment of the law is necessary to change the governor: K. Veeramani speech
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...