×

தட்டார்மடம் அருகே பரபரப்பு: திசையன்விளை மாணவர் சிறுவர்களால் கொன்று புதைப்பு

சாத்தான்குளம்: நெல்லை மாவட்டம், திசையன்விளை, செல்வமருதூரைச் சேர்ந்த தங்கத்துரை மகன் ராஜேந்திரன் (22). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த அக். 9ம் தேதி குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் சுமதி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று உவரி போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக திசையன்விளையைச் சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மாயமான ராஜேந்திரனை தட்டார்மடம் அருகே எம்எல்தேரி பகுதியில் கொன்று புதைத்தாக தகவல் தெரிவித்துள்ளார்.  

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் திசையன்விளை போலீசார், சிறுவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதுடன், ராஜேந்திரனை கொன்று புதைத்த எம்எல் தேரி பகுதிக்கு அழைத்து வந்தனர். அப்போது வள்ளியூர் டிஎஸ்பி யோகேஸ்குமார், திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பவுலோஸ், சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் முன்னிலையில் ராஜேந்திரன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே அரசு டாக்டர் மூலம் பிரேத பரிசோதனை நடந்தது.

 இதனிடையே இந்த கொலை தொடர்பாக 3 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் ராஜேந்திரனும், மற்றொரு 16 வயது சிறுவனும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்.9ம் தேதிக்கு முன்னர் ராஜேந்திரனை, சிறுவர்கள் 3 பேரும் தட்டார்மடம் அருகே உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத எம்எல் தேரி பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்ந்து ராஜேந்திரனை அடித்துக் கொலை செய்து உடலை புதைத்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முறையான விசாரணை இல்லை
  கொலையான ராஜேந்திரனின் தாயார் சுமதி கூறுகையில், ‘குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு செல்வதாக கூறிச்சென்ற என மகன் வீடு  திரும்பவில்லை என திசையன்விளை போலீசில் கடந்த அக்.21ம் தேதி புகார் செய்தேன். அப்போது மனு பெற்ற  போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழித்தனர். பின்னர்  சிறிது நாள் கழித்துதான் மாயமானதாக வழக்குபதிவு செய்தனர். எனது மகன்  காணாமல் போனது குறித்து முறையாக விசாரிக்கவில்லை. மேலும் உடலை  தோண்டி எடுக்கும் போதும் எங்களை போலீசார் அனுமதிக்கவில்லை என்றார்.

Tags : Thattarmadam , Pandemonium near Thattarmadam: Vektriyanvila students killed and buried by boys
× RELATED தட்டார்மடம் அருகே பெண்ணிடம் அத்துமீறிய வியாபாரி கைது