மானாமதுரை அருகேயுள்ள அழகாபுரி கண்மாயை தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள அழகாபுரி கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை ஒன்றியம் மாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட அழகாபுரி கண்மாய் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கண்மாய் மூலம் 100 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். அலங்காரக்குளம் நிரம்பி மாறுகால் பாய்ந்தால் அழகாபுரிக்கண்மாயில் நிரம்பும் வகையிலும் அங்கிருந்து செட்டிகுளம் கண்மாய்க்கு சுப்பன் கால்வாய் மூலம் தண்ணீர் செல்லும் வகையிலும் வரத்துகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்மாய் மூலம் அழகாபுரி, மாங்குளம், செட்டிகுளம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக கண்மாய் முழுமையாக பராமரிப்பு இல்லாமல் போனதால் மடைகள் தூர்ந்துபோன நிலையில் உள்ளன. கண்மாயில் தண்ணீர் திறந்து விடப்படும் மடையின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. ஆதலால் இக்கண்மாய் உதவியால் பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் தரிசாக மாறிவருகின்றன. சிலர் மட்டும் நெல் விவசாயத்திற்கு பதில் மாற்று விவசாயம் செய்கின்றனர்.

இந்த கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் உள்ளிட்ட தேவையற்ற மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. நீர்பிடிப்பு பகுதிகள் மேடாகி விட்டதால் மழை நீரும் தேங்க வழியில்லாமல் உள்ளது. கண்மாயை சுற்றி கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் கண்மாய்க்கரை வலுவில்லாமல் உள்ளது. கண்மாயின் உள்பகுதியிலும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கண்மாயின் பெரும்பகுதி தற்போது வீட்டுமனைகளாக மாறியுள்ளதுடன், சிலர் கால்நடைகள் கட்டும் இடமாகவும், வைக்கோல் போர், காங்கிரிட் கட்டுமான கழிவுகள், குப்பைகள் கொட்டிவைக்கும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே கண்மாயை சுற்றி வளர்ந்துள்ள தேவையற்ற மரங்களை முழுமையாக அகற்றவும், கரைகளை பலப்படுத்தி, கண்மாயை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: