×

கிராமங்களில் மீண்டும் பழமை திரும்புகிறது; மாட்டு வண்டியில் உப்பு விற்பனை படுஜோர்: திருவாடானை அருகே ஆச்சர்யம்

திருவாடானை: திருவாடானையை அடுத்துள்ள கிராம பகுதிகளில் ஆச்சர்யம் ஏற்படுத்தும் வகையில், பழங்கால முறைப்படி மாட்டு வண்டிகளில் உப்பு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புறங்களில் சரியான சாலை வசதி இல்லாத நிலையில் வாகன போக்குவரத்து அவ்வளவாக நடைபெறவில்லை. பொதுவாக கிராமப்புறங்களில் மண் ரோடு மற்றும் காவல் ரோடு ஆகியவை தான் அதிகமாக இருந்தது. இதனால் தலைச்சுமையாய் காய்கறி, கருப்பட்டி, மீன், கருவாடு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நடைபெற்று வந்தது,

இந்நிலையில் கிராமங்களின் அடிப்படை வளர்ச்சி அதிகரித்து விட்ட நிலையில், வாகன பெருக்கங்களும் கூடிவிட்டது, இதனால் மீன், கருவாடு முதல் பால், காய்கறி வரை அனைத்து பொருட்களின் விற்பனையும் டூவீலர் மற்றும் சரக்கு வேன் மூலம் நடைபெற்று வருகிறது. முன்பு பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் நகரத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. காலப்போக்கில் வாகனங்கள் கிராமப்புறங்களிலும் அதிகரித்துவிட்டது. காலத்திற்கு ஏற்றார் போல் சிறு வியாபாரிகளும் வாகனங்களில் சென்று அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை இல்லாத காலத்தில் கிராம பகுதிகளுக்கு மாட்டு வண்டி மூலம் உப்பு விற்பனை நடைபெறும். மாட்டு வண்டியை ஊரின் மையப்பகுதியில் நிறுத்தி உப்பு வாங்கலையோ உப்பு என சத்தமிட்டு விற்பனை செய்தனர். தற்போது அதெல்லாம் மறைந்து உப்புகள் பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வந்து விட்டது. கிராமப்புறங்களில் கூட மாட்டு வண்டிகளும் ஒழிக்கப்பட்டு விட்டது. மாடுகளை வளர்த்து அதன் மூலம் வியாபாரம் பார்த்து சம்பாதிக்கும் காலம் பல ஆண்டுகளுக்கு முன்பே மலையேறிவிட்டது. உப்பு மூட்டைகளையும் சில்லறை விற்பனைக்கு வாகனங்களில் ஏற்றி வந்து விற்பனை செய்ய துவங்கினர்.

இந்நிலையில் டீசல், பெட்ரோல் விலை அதிகரிப்பால் வாகனங்களில் உப்பு விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்த்து வருகின்றனர். உப்பு விலை மிக குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக உள்ளது. இந்நிலையில் தற்போது கிராமப்புறங்களில் பழங்கால முறைப்படி மாட்டு வண்டிகளில் வந்து சிலர் உப்பு விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். இதுகுறித்து திருப்பாலைக்குடியைச் சேர்ந்த மாட்டு வண்டி உப்பு வியாபாரி ஜெய்சங்கர் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு மாட்டு வண்டியில் வந்து உப்பு விற்பனை செய்வார்கள். காலப்போக்கில் அது மறைந்து விட்டது.

வாகன பெருக்கத்தில் தூத்துக்குடியில் இருந்து உப்பு வாங்கி வந்து விற்பனை செய்தனர். மேலும் பாக்கெட் உப்பு மக்களை கவர்ந்துள்ளதால் அதன் விற்பனை அதிகரித்து விட்டது. இந்நிலையில் மீண்டும் உள்ளூர் பகுதியில் விளையும் கல் உப்பு உடலுக்கு நன்மை பயக்கும் என்ற உண்மை கிராமப்புற மக்களுக்கும் தெரிந்து விட்டது. ஆகையால் மீண்டும் கல் உப்பை விற்பனை செய்ய துவங்கி விட்டேன். வாகனங்களில் வந்து உப்பு விற்பனை செய்ய டீசல் செலவு கூடிவிடும் என்பதால் போதிய லாபம் கிடைக்காது. ஆகவே பழைய முறைப்படி மாட்டு வண்டியில் உப்பு விற்பனையை நடத்துகிறேன்.

அறுவடை சமயத்தில் நெல்லை கொடுத்து உப்பை மாற்று பொருளாக மக்கள் வாங்குகின்றனர். மேலும் புது நெல் கொடுத்து உப்பு வாங்க வேண்டும் என்ற பழைய சம்பிரதாயத்தை மக்கள் பலரும் இன்றுவரை பின்பற்றுகின்றனர். இருப்பினும் நெல் இல்லை என்றால் பணம் கொடுத்து பலரும் வாங்குகின்றனர். மாட்டு வண்டியில் செல்வதால் செலவும் குறைகின்றது. ஓரளவு லாபமும் கிடைக்கிறது என்றார்.

Tags : Cow Cart Padujor ,Thiruvadana , Villages return to old times; Sale of salt in bullock cart Padujor: Surprise near Thiruvadanai
× RELATED வாகனங்களின் டயரை பஞ்சராக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை