×

பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் லிங்காபுரம்-காந்தவயல் இடையே மோட்டார் படகு சேவை ரத்து: தரை வழி போக்குவரத்து துவங்கியது

மேட்டுப்பாளையம்: பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் லிங்காபுரம்-காந்தவயல் இடையே மீண்டும் தரை வழி போக்குவரத்து துவங்கப்பட்டு மோட்டார் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதங்களுக்கு முன் பெய்தது. இதனையடுத்து 100 அடி கொள்ளவு கொண்ட பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் மற்ற பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகளவில் பெய்ததால் கோத்தகிரி, கூடலூர் மாயாறு வழியாகவும் தண்ணீர் பவானி சாகர் அணைக்கு வந்து சேர்ந்தது. இதனால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது. இதனால் அணையின் நீர்தேக்க பகுதிகளான சிறுமுகை, லிங்காபுரம், காந்தயல் பகுதியில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது. இதனிடையே லிங்காபுரத்தில் இருந்த காந்தவயல், காந்தையூர், மேலூர், ஆலூர் உள்ளிட்ட மலை வாழ் கிராமங்களுக்கு செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து இப்பகுதியில் படகு மூலம் மேற்கண்ட 4 கிராம மக்கள் பயணம் செய்ய பரிசல் பயணம் தொடங்கப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோர் படகு மூலம் சென்று வந்தனர். மேலும், தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து மோட்டார் படகுகள் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் கூடுதலாக இயக்கப்பட்டு வந்தன. இதனிடையே தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளதால் மோட்டார் படகு இயக்கம் குறைந்துள்ளது.

இதனால் பரிசல் மட்டுமே இயக்கக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. எனவே, ஆழியாறு அணையில் இருந்து கொண்டு வரப்பட்ட மோட்டார் படகு மீண்டும் ஆழியாறு அணைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும், தண்ணீர் குறைந்தவுடன் விரைவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்க உள்ளதாக சிறுமுகை பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags : Lingapuram-Kandavayal ,Bhavanisagar dam , Motor boat service canceled between Lingapuram-Kanthavayal as Bhavanisagar dam water level recedes: Land transport resumed
× RELATED 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பவானிசாகர் அணையின் மீது விழிப்புணர்வு பேனர்