×

தடை செய்த வலையில் பிடித்த 3 டன் மீன்கள் பறிமுதல்: மண்டபம் தென் கடல் பகுதியில் அதிகாரிகள் அதிரடி

ராமநாதபுரம்: மண்டபம் தென் கடல் பகுதியில் இருந்து தடை செய்யப்பட்ட வலையால் பிடித்து வந்த 3 டன் மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தென் கடலில் நேற்று முன்தினம் தொழிலுக்குச் சென்ற ஒரு சில படகுகள் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக மீன்வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், நேற்று காலை தென்கடல் பகுதியில் இருந்து மண்டபத்தில் உள்ள கரைக்கு திரும்பிய விசைப்படகுகளில் இருந்து இறக்கிய கூடைகளில் இருந்த வலைகள் மற்றும் மீன்களை கடலோர பாதுகாப்புக்கான உச்சிப்புளி சிறப்பு அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த படகுகளில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகள் இருப்பதும், அந்த மீன்கள் தடை செய்யப்பட்ட வலைகளால் பிடிக்கப்பட்டவை என்பதும் உறுதியானது. இதையடுத்து 6 விசைப்படகுகளில் இருந்த 3 டன் மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக படகு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநருக்கு அமலாக்கப்பிரிவினர் பரிந்துரைத்தனர்.


Tags : Mandapam ,South Sea , 3 tons of fish caught in prohibited nets seized: Mandapam South Sea area officials in action
× RELATED விளையாட்டு திடலை சீரமைக்க வேண்டும் புதுமடம் மக்கள் கோரிக்கை