மின்சார திருத்த சட்டம் கொண்டு வருவதை திமுக ஏற்காது மாதந்தோறும் மின் கட்டணம் மாறும் என்பது தவறான தகவல்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: மாதம்தோறும் மின் கட்டணம் மாறும் என்பது தவறான தகவல். ஒன்றிய அரசு மின்சார திருத்த சட்டம் ெகாண்டு வருவதை திமுக ஏற்காது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  மின் கட்டணம் சம்பந்தமாக, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திருத்த சட்ட மசோதா பற்றியும், அதனால் மாதம் ஒருமுறை மின்கட்டணத்தில் மாற்றம் வரும் என்ற தகவல்கள் உலா வருவதை பார்த்தேன்.

மின்வாரியம் சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது கருத்துகள் இருந்தால் என்னிடமோ அல்லது துறை அதிகாரிகளிடமோ கேட்டு விட்டு தகவல்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும். மக்களுக்கு உண்மையான செய்திகள் சென்றடையும். மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் உயரும் என்ற கருத்து மிக தவறானது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திருத்த சட்ட மசோதா என்பது முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் அறிவுறுத்தி நாடாளுமன்றத்தில் இந்த மசோதா வந்த போது திமுக சார்பில் மிக கடுமையாக அதற்கான எதிர்ப்புகளை பதிவு செய்தது.

அதன் பின்பு அந்த புதிய திருத்த சட்ட மசோதா என்பது நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே நிச்சயமாக முதல்வர், ஒன்றிய அரசு கொண்டு வருகிற மின்சார சட்ட திருத்த மசோதாவை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அனுமதிக்க மாட்டார்கள். மாதம் ஒருமுறை மின்கட்டணத்தில் மாற்றம் வரும் என்று தவறான தகவல்களை பரப்பி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம். விமானத்தில் அவசரகால கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பொய் சொல்கிறார்.

ஒரு கட்சியின் தலைவராக இருக்க கூடியவர் பொய்யான செய்தியை வெளியிடுகிறார் என்பதை அனை வரும் பார்க்க வேண்டும். விமானத்தில் அவசர கால கதவை திறக்கவில்லை என அண்ணாமலை கூறுகிறார். ஆனால் விமான கதவு திறக்கப்பட்டது தொடர்பாக ஒன்றிய அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார். அதேபோன்று அரை மணி நேரம் தான் விமானம் காலதாமதமானது என்று பச்சை பொய்யை சொல்கிறார்.

இச்சம்பவம் குறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சரே பேசியுள்ள நிலையில் இதில் ஏன் அண்ணாமலை பொய் சொல்ல வேண்டும். அவரின் கை கடிகாரத்திற்கான பில் அவரிடம் இருந்திருந்தால் எடுத்து கொடுக்க வேண்டியது தானே, ஏப்ரல் மாதம் தருவதாக கூறுகிறார். இதிலிருந்தே தெரியவில்லையா, அவர் அந்த பில்லை தயார் செய்து கொடுப்பார் என்று. தமிழ்நாட்டில் பாஜவில் எவ்வளவு பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்று சொல்ல வேண்டும். நோட்டாவோடு போட்டி போடக் கூடியவர்கள் தமிழ்நாடு பாஜவினர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: