×

கோவை குற்றாலம் சுற்றுலா நுழைவு கட்டணத்தில் ரூ.35 லட்சம் மோசடி: வனவர் பணியிடை நீக்கம்

கோவை: கோவை குற்றாலம் சுற்றுலா நுழைவு கட்டணத்தில் மோசடியில் ஈடுபட்ட வனவர் ராஜேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை குற்றால அருவிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவர். கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60, குழந்தைகளுக்கு ரூ.30, இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.20, கார்கள் நிறுத்த ரூ.50 கட்டணமாக வனத்துறை வசூலித்து வருகிறது. இந்நிலையில் இந்த கட்டண வசூலில் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

நுழைவு சீட்டுகள் வழங்கும் இடத்தில் இரண்டு மெஷின்களில் நுழைவு கட்டண சீட்டை அச்சிட்டு பணத்தை பெற்று வந்துள்ளனர். இதில் ஒரு மிஷினில் பதிவு செய்யப்படும் சுற்றுலா பயணிகளின் தொகை மட்டும் அரசுக்கு செலுத்தியுள்ளனர். மற்றொரு மிஷினில் போலி ரசிது தயார் செய்து பல லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முன்னாள் போளுவாம்பட்டி ரேஞ்சர் சரவணன் மற்றும் வனவர் ராஜேஷ் குமார் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதில், ரேஞ்சர் சரவணன் மதுரை வனமண்டலத்திற்கு உட்பட்ட ராமேஸ்வரம் வனச்சரகத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக போளுவாம்பட்டி வனவர் ராஜேஸ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் ரேஞ்சர் மற்றும் தற்போது ராமேஸ்வரத்தில் பணியாற்றி வரும் சரவணன் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய மதுரை வனப்பாதுகாவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : Coimbatore ,Courtalam , Coimbatore Courtalam Tourist Entry Fee Scam of Rs.35 Lakhs: Forester Dismissal
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்