×

பாஜ மாநில செயற்குழு கூட்டத்தில் முதன்முறையாக தமிழ்தாய் வாழ்த்து

கடலூர்: கடலூரில் நடந்த பாஜ மாநில செயற்குழு கூட்டத்தில் முதன்முறையாக தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது.  பாஜக மாநில செயற்குழு கூட்டம் கடலூரில்  நேற்று நடந்தது. இதில், மாநில தலைவர் அண்ணாமலை, மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுதாகர் ரெட்டி, ஒன்றிய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்பிக்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல்பாடுகள், அரசியல் ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஜி20 மாநாடு பணிகள், பிரதமரின் மன்கி பாத் நிகழ்வு, நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பு என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பாஜக கூட்டத்தில் வந்தே மாதிரம் பாடல் மட்டும் ஒலிக்கப்படும். தற்போது முதல்முறையாக வந்தேமாதிரம் பாடலை தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் கூட்டம் துவங்கியது.

ஏற்கனவே, ஆளுநர் ரவி தமிழ்நாடு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பி அதற்கு விளக்கம் அளித்து உள்ள நிலையில், பாஜகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடவில்லை என்றால் தமிழர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்காக தமிழ்தாய் வாழ்த்தும் பாடப்பட்டு நிகழ்ச்சி துவங்கியதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது.

* பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்த்த அண்ணாமலை
மாநில செயற்குழு கூட்டம் முடிந்ததும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதியம் 1 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஏராளமான பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் குவிந்து இருந்தனர். 2 மணி வரை அவர் வரவில்லை. 2.30 மணி அளவில் பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம், பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை என கூறினார்.

இதனால் ஒன்றரை மணி நேரமாக காத்திருந்த பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த சில நாட்களாக விமானத்தில் கதவை திறந்தது தொடர்பாக நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையிலும், இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பம் போன்ற பல்வேறு பிரச்னைகள் இருப்பதால் பத்திரிகையாளர்கள் சந்திப்பை அண்ணாமலை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

Tags : Tamilhai ,BJP State Working Committee , Tamilhai greeting for the first time in the BJP State Working Committee meeting
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் தமிழ்த்தாய்...