மலைக்கோயிலில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு: பழநி - இடும்பன்மலை இடையே ரோப்கார்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

பழநி: ‘பழநி - இடும்பன்மலை இடையே ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும்’ என பழநி மலைக்கோயிலில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டபாணி சுவாமி இக்கோயிலில் 17 வருடங்களுக்கு பிறகு வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பழநி மலைக்கோயிலுக்கு படிப்பாதை வழியாக  சென்ற அமைச்சர் சேகர்பாபு, புதுப்பிக்கப்பட்டு வரும் நிழல் மண்டபங்களை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ராஜகோபுரம், தங்க கோபுரம்,  யாகசாலைகள், வெளிப்பிரகாரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கும்பாபிஷேக  பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், கலெக்டர் விசாகன், வருவாய் அலுவலர் லதா, பழநி கோட்டாட்சியர் சிவகுமார், கோயில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் கோயில் அறங்காவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பணியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி பார்வையில் நடந்து வருகிறது. 15 நாட்களுக்கு ஒருமுறை முதல்வரிடம் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேக பணிகள் திருப்திகரமாக உள்ளன. கும்பாபிஷேகத்திற்காக 94 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகம விதிப்படி தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும். கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டுகளிக்க நகரில் முக்கிய இடங்களில் 18 எல்இடி திரைகள் பொருத்தப்பட உள்ளன. ஹெலிகாப்டரில் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்திற்கு பிறகு பழநி மலைக்கோயிலில் இரண்டாவது ரோப்கார் பணி துரிதப்படுத்தப்படும். பெருந்திட்ட வரைவுக்காக 50 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாரணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பெருந்திட்ட வரைவு திட்டத்தில் பழநியில் உள்ள வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்துவது, பழநி மலை - இடும்பன்மலை இடையே ரோப்கார் அமைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

* 2 ஆயிரம் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

அமைச்சர் சேகர்பாபு மேலும் கூறுகையில், ‘‘கும்பாபிஷேகத்தை காண இதுவரை 47 ஆயிரம்  பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு  செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 2 ஆயிரம் பக்தர்கள்  குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். பக்தர்களின் நலனை கருத்தில்  கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய 4 மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.  கும்பாபிஷேக பணிகளை கண்காணிக்க கூடுதலாக 5 இணை ஆணையர்கள், 10 துணை  ஆணையர்கள், 15 உதவி ஆணையர்கள் அறநிலையத்துறையால் பணியமர்த்தப்பட உள்ளனர்’’ என்றார்.

Related Stories: