ஆம்பூர் தனியார் தொழிற்சாலைகளில் 2வது நாளாக ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது

ஆம்பூர்: ஆம்பூர் தனியார் ஷூ, தோல் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறையினர் 2வது நாளாக ரெய்டு நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆம்பூர் அடுத்த கொம்மேஸ்வரத்தில் இயங்கி வரும் தனியார் ஷூ தொழிற்சாலையில் நேற்று முன்தினம் 14 பேர் கொண்ட  வருமான வரித்துறை அதிகாரிகள் குழு திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த கம்பெனிக்கு சொந்தமான அருகிலுள்ள மற்றொரு ஷூ தொழிற்சாலை மற்றும் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையிலும் இந்த சோதனை நடந்தது.

அப்போது, அலுவலக பணியாளர்களிடம் துருவி துருவி விசாரித்தனர். பின்னர், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் வருமான வரிதுறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று 2வது நாளாக வருமான வரிதுறையினர் அந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் சோதனையை தொடர்ந்தனர். இதன்காரணமாக அந்த நிறுவனத்திற்கு தயாரிப்பு, உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்ய வந்த வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் வெளியே நிறுத்தப்பட்டன. மேலும் வருமானவரித்துறையினரின் சோதனையில் வரிஏய்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: