கோகுல்ராஜ் கொலை வழக்கில் கோயில் சிசிடிவி காட்சிகளை முறையாக ஆய்வு செய்யவில்லை: குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதம்

சென்னை:  சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல்  மாணவன் கோகுல்ராஜ் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தார். இந்நிலையில், கடந்த 2015 ஜூன் 23ம் தேதி காதலியுடன் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்றபோது அவரை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தது. கோகுல்ராஜ் உடல் தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 19 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 8 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதில் இரண்டு சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை மட்டுமே காவல்துறையினர் ஆய்வு செய்தனர். முழுவதுமாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார்.

அப்போது, நீதிபதிகள், கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன், சிம் கார்டு, ெமமரி கார்டு உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், அனைத்து ஆவணங்களும் உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டன என்றார். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்திற்காக விசாரணையை நீதிபதிகள் வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: