புதுடெல்லி: பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் வருண்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. குறிப்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாடாளுமன்றத்தால் மட்டுமே செய்யக் கூடியதாகும். அதனால் சட்ட விதிமுறைகளை மீறி நடத்தப்படும் அந்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க வேண்டும்.
மேலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சமமான சட்ட பாதுகாப்பு அளித்தல், ஆகியவற்றை நிலைநிறுத்தும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 14வது பிரிவை பீகார் அரசு மீறியுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, பீகாரில் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்துவது என்பது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஒன்றாகும்.
அதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு எந்தவித உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. இருப்பினும் மனுதாரருக்கு ஏதேனும் நிவாரணம் வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் பீகார் உயர்நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்த நீதிபதிகள், பீகாரில் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.