×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஆளுநரையும், அண்ணாமலையையும் விரட்டியடிக்கும் சக்தியாக இருக்கும்: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை: ஆளுநரையும், அண்ணாமலையையும் விரட்டியடிக்கும் சக்தியாக ஈரோடு இடைத்தேர்தல் அமையும் என்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, தமிழ்நாட்டின் பெருமைகளை சட்டமன்றத்தின் மாண்புகளை சிதைத்து கூட்டாட்சியை சீர்குலைக்கும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெறக்கோரி, கிண்டி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் சின்னமலையில் நேற்று நடந்தது. இதில், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தேசிய அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

முன்னதாக, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு என்ற பெயரே ஆளுநருக்கு கசக்கிற பெயராக மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாத, தமிழ்நாடு அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஆளுநரை, ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஒருவேளை திரும்ப பெறவில்லை என்றால், ஆளுநர் தேவை இல்லை என்று சொல்லக்கூடிய அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும். ஆளுநர் ரவி என்று சொல்வதைவிட, ரம்மி ரவி என்று சொன்னால் தான் மக்களுக்கு தெரிகிறது. எப்பொழுது அரசாங்கத்தையும், மக்களையும் புறக்கணித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தாரோ, அதேபோல் தமிழ்நாட்டை விட்டும் அவர் வெளியேறுவதுதான் நியாயமானது. அதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய விருப்பம். ஆளுநர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, பாஜ தலைவர் அண்ணாமலையும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.

இவர்கள், யாரும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க மாட்டார்கள். ஆர்.என்.ரவியையும், அண்ணாமலையையும் விரட்டி அடிக்கத்தான் ஈரோடு இடைத்தேர்தல் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு, முறையாக நடவடிக்கை எடுக்காவிடில் அடுத்த கட்டமாக மதச்சார்பற்ற அனைத்து கட்சிகளும் சேர்ந்து பெரிய அளவில் போராட்டம் இணைந்து நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வின்போது, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தேசிய அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், எம்எல்ஏ சின்னதுரை மற்றும் சம்பத், வாசுகி உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டபடி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட புறப்பட்டபோது, அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Erode Eastern Constituency ,Annamalayas ,Secretary of State ,K. Balakrishnan , Erode East by-election will be a force to oust Governor, Annamalai: Marxist Com. State Secretary K. Balakrishnan speech
× RELATED இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்...