×

கத்திவாக்கம் பஜார் தெருவில் ரூ.86.5 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு புதிய கட்டிடம்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

திருவொற்றியூர்: கத்திவாக்கம் பஜார் தெருவில் ரூ.86.5 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு புதிய கட்டிட பணிக்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 2வது வார்டுக்கு உட்பட்ட கத்திவாக்கம் பஜார் தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 1 முதல் 8ம் வகுப்பு வரை 285க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில், திருவொற்றியூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.75 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை மற்றும் கவுன்சிலர் கோமதி சந்தோஷ் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.50 லட்சம் செலவில் பழைய பள்ளி கட்டிடத்தை சீரமைக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்கான, கட்டுமான பணி துவக்க விழா நேற்று முன்தினம்  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கவுன்சிலர் கோமதி சந்தோஷ் தலைமை வகித்தார். எம்எல்ஏ கே.பி.சங்கர் கட்டுமான பணியை துவக்கி வைத்து, 2 மாடிகள், 6 வகுப்பறைகள் மற்றும் நவீன கழிப்பறைடன் கூடிய பள்ளி கட்டிடம், 3 மாதங்களில் கட்டப்பட்டு மாணவ, மாணவிகளின் பயன்பாட்டு விடப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் கே.பி.சொக்கலிங்கம்,  தம்பியா (எ) தமிழரசன், முன்னாள் கவுன்சிலர்கள் ரமேஷ், சேகர், நிர்வாகிகள் தேசப்பன், சுரேஷ், முனுசாமி, ஏ.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kathivakkam Bazar Street ,MLA , New building for school at a cost of Rs 86.5 lakh at Kathivakkam Bazar Street: MLA lays foundation stone
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில்...