×

269 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் 76 வாகன ஓட்டிகளிடம் ஒரே நாளில் ரூ.96 ஆயிரம் அபராதம் வசூல்: இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 2020ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த 269 வழக்குகளில் 76 வாகன ஓட்டிகளிடம் ஒரே நாளில் ரூ.96 ஆயிரம் அபராதம் வசூலித்த போக்குவரத்து இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில், பரங்கிமலை பகுதியில் உள்ள போக்குவரத்து அமலாக்கப்பிரிவு எல்லையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் போக்குவரத்து விதிகளை மீறியதாக 76 வாகன ஓட்டிகள் மீது 269 வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் அபராத தொகை கட்டாமல் காலம் கடத்தி வந்தனர்.

இதற்கிடையே போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி சென்னை மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள அபராத தொகை வசூலிக்க அனைத்து போக்குவரத்து அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டப்பட்டது. அதைதொடர்ந்து மாநகரம் முழுவதும் போக்குவரத்து அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தங்களது எல்லையில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அதன்படி பரங்கிமலை போக்குவரத்து அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷாம் சுந்தர்  தனது எல்லையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் போக்குவரத்து விதிகளை மீறி அபராதம் செலுத்தாமல் இருந்த வாகன ஓட்டிகளுக்கு போன் செய்து நிலுவையில் உள்ள வழக்குகளில் அபராதம் செலுத்த கோரி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதைதொடர்ந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் நிலுவையில் இருந்த 76 வாகன ஓட்டிகளிடம் ரூ.96 ஆயிரம் அபராதம் தொகையை ஆன்லைன் மூலம் வசூல் செய்துள்ளார். இன்ஸ்பெக்டரின் சிறப்பான பணியை பாராட்டி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தனது அலுவலகத்திற்கு போக்குவரத்து அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷாம் சுந்தரை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Tags : Commissioner , 76 motorists were fined Rs 96,000 in one day out of 269 traffic violation cases: Commissioner praised the inspector
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...