கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து: திரிசூலத்தில் பரபரப்பு

பல்லாவரம்: திரிசூலத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் இனசேர் ஆலாம் (27). இவர், பல்லாவரம் அடுத்த திரிசூலம் பெரியார் நகர் மெயின்ரோடு பகுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள சங்கர் என்பவரது வீட்டில் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, கட்டிடத்தின் 2வது தளத்தின் வெளிபுறம் பூச்சு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென எங்கிருந்தோ பறந்து வந்த துப்பாக்கி குண்டு ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் ஆலாமின் வலது காலில் துளைத்தது. இதனால், வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவருடன் பணிபுரிந்த சக தொழிலாளர்கள் உடனடியாக ஆலமை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரின் காலில் இருந்த துப்பாக்கி குண்டை மருத்துவர்கள் உடனடியாக அகற்றினர். மேலும், இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரனையில், சென்னை, மீனம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குட்ட மலை என்னும் பகுதியில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் (CISF) துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு குண்டு ஆலாம் காலில் பாய்ந்தது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இதேபோன்று திரிசூலம் பகுதியில் வீட்டில் இருந்த தொழிலாளி ஒருவர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: