காவேரி மருத்துவமனையில் சிறுநீர் குழாய் பாதித்த சிறுவனுக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை: டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பாராட்டு

சென்னை: வீங்கி பருத்த சிறுநீர் குழாய் பாதிப்பிருந்த 10 வயது சிறுவனுக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திய காவேரி மருத்துவமனை மருத்துவர்களுக்கு மருத்துவமனையின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சிறுநீர் பாதையியல் துறையின் மூத்த மருத்துவர் டாக்டர் ஜீவகன் கூறியதாவது: மியான்மரை சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு சிறுநீர் பாதை தொற்று் மற்றும் அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலியும் திரும்ப திரும்ப ஏற்பட்டதால் சென்னை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். நோய் பாதிப்பால் ஓராண்டாகவே அவதிப்பட்டுள்ளான். பரிசோதனைகளுக்குப் பிறகு மெகாயூரிட்டர் என அழைக்கப்படும் பருத்த சிறுநீர் குழாய் பாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

சிறுநீரகங்களை சிறுநீர் பையுடன் இணைப்பவையே இந்த சிறுநீர் குழாய்கள். இதன் தசைகள், சிறுநீர் நிரம்பக்கூடிய சிறுநீர் பைக்குள் சிறுநீரை கீழே அழுத்தித் தள்ள உதவுகின்றன. இந்த தசைகளில் அல்லது திசுக்களில் உருவாகக்கூடிய எந்தவொரு பிறழ்வு இயல்புக்கு மாறான நிலையானது, சிறுநீர் பையில் போதுமான அளவை விட குறைவாகவே சிறுநீர் சேர்வதை விளைவிக்கும். சிறுநீர் குழாய்களுக்கே சிறுநீர் திரும்ப போவதை ஏற்படுத்தும். இதன் காரணமாக, குழாய்கள் விரிவடைகின்றன மற்றும் பருத்து சிறுநீர் குழாய் என்ற பாதிப்பு ஏற்படுகிறது. சிறுவனின் சிறுநீரகங்கள் இயல்பாக செயல்படுகின்றனவா என்பதை பரிசோதிப்பதற்காக காவேரி மருத்துவமனையின் சிறுநீர் பாதையியல் நிபுணர்கள் மற்றும் குழந்தை நல மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு சிஇசிடி ஸ்கேன் சோதனை மற்றும் கான்ட்ராஸ்ட் ஆய்வுகளை செய்தன. இதற்கான அறுவை சிகிச்சைக்கு முன்பு சிறுநீரகங்கள் மீதான மதிப்பீட்டை செய்வது மிக முக்கியமானது.

சிறுவனின் சிறுநீரகங்கள் இயல்பாக செயலாற்றிக் கொண்டிருந்தன. வீங்கி விரிவடைந்திருந்த சிறுநீர் குழாயை அதன் இயல்பான அளவிற்கு குறைத்து மற்றும் அதன் பிறகு ஒரு வேறுபட்ட மற்றும் ஆரோக்கியமான அமைவிடத்தில் சிறுநீர் பையுடன் மீண்டும் இணைக்கின்ற அறுவை சிகிச்சையை செய்தோம். பிறகு, இது மீண்டும் சுருங்கி விடாமல் தடுப்பதற்காக சிறுநீர் பைகள் இணைக்கப்படும் இடத்தில் ஒரு தற்காலிக ஸ்டென்ட்டை பொருத்தினோம். 6 வாரங்களுக்குப் பிறகு ஸ்டென்ட்டை எடுத்து விட்டோம். சிறுவனின் சிறுநீர் பை செயல்பாடு இப்போது மேம்பட்டிருக்கிறது மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளிலிருந்தும் விடுபட்டிருக்கிறான். சிறுவனிடம் பிறப்பிலிருந்த பாதிப்பு நிலையானது தானாகவே சரியாகவில்லை. ஆகவே தான், 10 வயதை கடக்கும் நிலையில் இருக்கும்போது வீங்கிய சிறுநீர் குழாய் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இத்தகைய அறுவை சிகிச்சையை தவிர்ப்பது, திரும்ப திரும்ப சிறுநீர் பாதையில் தொற்றுகளை விளைவித்து, சிறுநீரக செயலிழப்பிற்கு வழி வகுத்துவிடும்.

சென்னை, காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், ‘‘சிறுநீர் பாதையில் பிறவியிலிருந்தே இருக்கும் பாதிப்பு நிலைகள், குழந்தை வளரும்போது சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஆகவே, சரியான காலத்திற்குள் இந்த இயல்பு பிறழ்வு பிரச்னையை சரிசெய்வது முக்கியம். சமீப ஆண்டுகளில், பேறுகாலத்திற்கு முந்தைய நிலையிலேயே இத்தகைய இயல்பு பிறழ்வுகளை கண்டறிவது எங்களுக்கு சாத்தியமாகியிருக்கிறது. சிறுநீர் பாதையில் காணப்படும் இத்தகைய பிறழ்வுகளினால் அவதியுறும் குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை தொற்றுகள் அடிக்கடி ஏற்படக்கூடும். வளரிளம் பருவத்தை அவர்கள் அடையும்போது சிறுநீரக செயலிழப்பிற்கு வழிவகுத்துவிடும். சிறுவனுக்கு இருந்த பாதிப்பு நிலை அரிதானது. 10 வயது சிறுவனுக்கு இருந்த இயல்பு பிறழ்வை துல்லியமாக கண்டறிந்து மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சரியான அறுவை சிகிச்சையை மருத்துவ நிபுணர்கள் செய்துள்ளனர். முழுமையான சிகிச்சை அளித்து, பாதிப்பிலிருந்து சிறுவனை குணமாக்கிய டாக்டர் ஜீவகன் மற்றும் குழுவினரை பாராட்டுகிறேன். வெற்றிகரமான சிகிச்சையின் மூலம் நல்ல தரமான வாழ்க்கையை சிறுவன் இனிமேல் வாழமுடியும். இவ்வாறு கூறினர்.

Related Stories: