×

கடலூரில் பாஜ மாநில செயற்குழு கூட்டம்: இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அண்ணாமலை ஆலோசனை

கடலூர்: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, அதிமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதிமுக பல அணிகளாக பிரிந்துள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை அந்த கட்சி போட்டியிடாமல் அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டது.

இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில், கடலூரில் பாஜ செயற்குழு கூட்டம் இன்று காலை துவங்கியது. மாலை 7 மணி வரை பாஜக இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஈரோடு கிழக்கில் பாஜக தனித்து போட்டியிடுமா? கூட்டணி கட்சிக்கு ஆதரவளிக்குமா? வேட்பாளர் யார்? அதிமுக தொடர்பான நிலைபாடு போன்றவை குறித்து அண்ணாமலை தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

இன்று காலை துவங்கிய கூட்டத்தில் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர் அண்ணாமலை தலைமை உரையாற்றினார். இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளாக நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுதாகர் ரெட்டி, மாநில துணை தலைவர் நரேந்திரன், பொருளாளர் வேகன், பொதுச் செயலாளர் கேவச விநாயகம் உள்ளிட்டோர் பேசினர்.

மாலை 4 மணி முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல்பாடுகள், அரசியல் ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஜி20 மாநாட்டு பணிகள், பிரதமரின் மன்கி பாத் நிகழ்வு, நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பு குறித்து மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்பிக்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு எச்.ராஜா, பொதுச்செயலாளர் முருகானந்தம், முன்னாள் மேயர் கார்த்தியாயினி, மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி உள்ளிட்டவர்கள் பேசுகின்றனர். மாநில செயற்குழு மற்றும் நிகழ்வுகளில் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜவின் நிலைபாடு குறித்து இன்று மாலை  விடை கிடைக்கும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : Baja ,Cuddalore ,Anamalai , BJP State Working Committee meeting in Cuddalore: Annamalai advises on contesting by-elections
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை