பாஜக ஆதரவு, இரட்டை இலை கேட்டு ஓபிஎஸ், அண்ணாமலைக்கு எடப்பாடி தூது: கடலூர் பாஜ செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு

சென்னை: பாஜக ஆதரவை கேட்டு அண்ணாமலைக்கும், இரட்டை இலை சின்னம் கேட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமி தூதுவிட்டுள்ளார். இதற்கிடையில், போட்டியிடுவது குறித்து கடலூர் செயற்குழு கூட்டத்தில் பாஜக இன்று முக்கிய முடிவை எடுக்கிறது. அதேநேரத்தில் வாசன் போட்டியில்லை என்று அறிவித்து போட்டியில் இருந்து ஒதுங்கிவிட்டார். ஆனாலும் கூட்டணியில் வேட்பாளரை அறிவிப்பதில் எடப்பாடி தயங்கி வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா, உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.  இதையொட்டி இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி  நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி,  தமிழகத்தில் பிரதான கட்சிகளாக விளங்கும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள்  வேட்பாளர் குறித்து பல்வேறு ஆலோசனைகளை கூட்டணி கட்சிகளுடன் விவாதித்து  வந்தன.

இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு  கிழக்கு தொகுதியை ஒதுக்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்தான  அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். ஓரிரு நாளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், அதிமுகவில் எடப்பாடி  பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்குமான பனிப்போர் தொடர்ந்து நீடித்து  வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு  தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் தமாகா போட்டியிட்டு தோல்வியை  சந்தித்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு  இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுக இடைக்கால  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன்  தரப்பும் வேட்பாளர்களை முடிவு செய்வது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக  ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி தர்மத்தை மதித்து  தமாகா போட்டியிட அதிமுக உதவ வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.  ஆனால், தேர்தலில் தமாகா படுதோல்வியை சந்தித்தால் எதிர்க்கட்சிகளுக்கு  அவமானமாக போய்விடும் என்பதால் அதிமுகவே தேர்தலில் போட்டியிட விரும்புவதாக  எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில்,  பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருப்பினும், கூட்டணி தர்மத்தை மீறும் வகையில்  ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள்  அமைச்சருமான கே.வி.ராமலிங்கத்தை வேட்பாளராக நிறுத்த அதிமுக முடிவு செய்து  தேர்தல் பணிகளை கடந்த வாரமே தொடங்கிவிட்டதாக தகவல்கள் கசிந்ததையடுத்து  கூட்டணி தர்மத்தை அதிமுக மீறியதாக தமாகாவின் மூத்த நிர்வாகிகள் இடையே  பேச்சுகள் உலாவி வந்தன.

அதேநேரத்தில் பாஜக சார்பில் தமாகா போட்டியிட்டால் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று முடிவெடுத்தது. பாஜக தனித்து இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது. அப்படியானால், மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து சரிக்கு சமமாக பேச முடியாது. அதேநேரத்தில் பாஜகவை நம்பி வந்த ஓ.பன்னீர்செல்வத்தையும் கைவிட்ட நிலையாகிவிடும் என்று கருதும் பாஜக, தமாகா போட்டியிட்டால் எடப்பாடியை ஆதரிக்காத நிலை உருவாகும். மக்களவை தேர்தலில் பாதிக்குப்பாதி சீட் கேட்கலாம் என்று பாஜக நினைத்தது.

இதனால் வாசனை தொடர்பு கொண்டு பேசிய அண்ணாமலை, தமாகா இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அதிமுக, பாஜக இடையேயான பனிப்போரில் நாம் சிக்கிவிடக் கூடாது என்று கருதிய வாசன், சீட் கேட்டு எடப்பாடியை நெருக்கி வந்ததை கைவிட்டு விட்டு, தேர்தலில் போட்டியில்லை என்று முன் கூட்டியே அறிவித்து விட்டார். வழக்கம்போல, தேர்தல் வேட்பு மனு முடியும்வரை எந்த விஷயத்தையும் இழுத்தடிக்கும் வாசன், இந்த முறை முன் கூட்டியே தனது முடிவை அறிவித்து விட்டார். இது எடப்பாடிக்கு முதல் கட்ட வெற்றி தான்.

அதேநேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று பாஜக மாநில தலைமையை அகில இந்திய தலைமை கேட்டுக் கொண்டது. ஆனால் வாசன் போல கேட்டவுடன் ஆதரவு ெகாடுக்க வேண்டாம். இழுத்தடித்து கொடுக்கலாம் என்று அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தற்போது இருப்பது ஓ.பன்னீர்செல்வம்தான். அவர் கடிதம் கொடுத்தால்தான் இரட்டை இலை கிடைக்கும் என்ற சூழ்நிலை உள்ளது.

இதனால் அவரிடம் பாஜக தலைவர்கள் மூலம் பேசி, தேர்தல் ஆணையத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடிதான் என்பதற்கான உத்தரவை வாங்கித் தரும்படி எடப்பாடி கூறி வருகிறார். ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ, என்னை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக் கொண்டு அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால், நான் கடிதம் கொடுக்கிறேன். நான் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை என்கிறார். ஆனால் இதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை. அதேநேரத்தில் இந்த விளையாட்டுக்கு நாங்கள் வரவில்லை என்று அண்ணாமலை ஒதுங்கிக் கொண்டார். அதிமுக போட்டியிட்டால் பிரசாரத்திற்கு வருகிறேன் என்று மட்டும் கூறிவிட்டு ஒதுங்கிவிட்டார்.

இதனால் அதிமுகவில் எடப்பாடி அணி போட்டியிட்டால், ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர் ஒருவரை நிறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் கடிதம் கொடுத்து அவரது வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை கேட்பார். அப்போது அவருக்கு கொடுக்கக் கூடாது என்று எடப்பாடி தேர்தல் ஆணையத்தில் முறையிடுவார். இதனால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கும். இதனால் சின்னத்தை முடக்கிய பழி பன்னீர்செல்வத்திற்கு பதில், எடப்பாடி மீது விழும். இதனால் இடியாப்ப சிக்கலில் எடப்பாடி மாட்டியுள்ளார். ஆனாலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதில் எடப்பாடி உறுதியாக உள்ளார். சின்னத்திற்கு பாஜக உதவ வேண்டும் என்று கேட்டு வருகிறார். ஆனால் பாஜக கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட  வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழ்மாநில காங்கிரஸ்  கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த  2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில  காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட  வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தொகுதியில் த.மா.கா வேட்பாளராக  யுவராஜா  போட்டியிட்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அனைத்துதரப்பு  மக்களும் வசிக்கிறார்கள். இதில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்களின் உழைப்பால் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396  வாக்குகள் பெற்றோம். தொடர்ந்து அத்தொகுதியில், கடந்த 20 மாதங்களாக மக்கள்  நலப்பணிகளை செய்து வருகிறோம்.

ஆனால், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் எதிர்கால  நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு கூட்டணியின் முதன்மைக்  கட்சியான  அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை த.மா.கா  ஏற்றுக்கொண்டது.

இவ்வாறு அவர் அறிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: