நெல்லை: அமிர்த் பாரத் ரயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ் தென்காசி, திருச்செந்தூர், அம்பை, கோவில்பட்டி உள்ளிட்ட தென் மாவட்ட ரயில் நிலையங்களை மேம்
படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. ரயில் நிலையங்களை நவீனப்படுத்த ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை நவீனமயமாக்க ரயில்வே அமைச்சகம் ‘அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டம்’என்ற புதிய திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை ரயில்வே கோட்டம் சார்பில், இதற்கான ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, குறிப்பிட்ட ரயில் நிலையங்களின் கட்டிட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை இறுதி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. திட்ட கருத்துரு, சாத்தியக்கூறு அறிக்கை, மாஸ்டர் பிளான், நகர மேம்பாட்டு வடிவமைப்பு, கட்டமைப்பை வடிவமைத்தல், வரைபடங்கள், தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கை, திட்ட மதிப்பீடு தயாரித்தல் உள்ளிட்டவை இதன்மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், முக்கிய ரயில் நிலையங்களில் காத்திருப்பு அறைகளை ஒன்றிணைத்து பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும், நல்ல சிற்றுண்டி வசதிகள் ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் திட்டமிடப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள், ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பலகைகள், மேம்படுத்தப்பட்ட விளக்குகள், தேவையற்ற கட்டமைப்புகளை அகற்றுதல், பிரத்யேக பாதசாரி பாதைகள் போன்றவைகளை அமைத்து நிலைய வளாகத்தை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தென்காசி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், கோவில்பட்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், பரமக்குடி, புனலூர், மணப்பாறை, பழனி, சோழவந்தான், விருதுநகர், ராஜபாளையம், வில்லிபுத்தூர் ஆகிய 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்ட அறிக்கை சமர்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமிர்த் பாரத் நிலையத் திட்டத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு பிளாட்பாரங்களின் நீளத்தை அதிகரித்தல், நடைமேடை பகுதியின் வடிகால் வசதிக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தல், காத்திருப்பு அறைகள், பிளாட்பாரங்கள், ஓய்வு அறைகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் இருக்கும் மரச்சாமான்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, தேவைப்பட்டால் மேலும் வசதியான மற்றும் நீடித்த மரச்சாமான்கள் அமைக்கப்பட உள்ளது. ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை அதிகரிப்பதோடு, போதிய எண்ணிக்கையிலான கழிப்பறைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறுகையில், ‘‘நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் உள்ளிட்ட அனைத்து முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகளின் நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறோம். நெல்லையில் கூடுதலாக இரண்டு நடைமேடைகள் அமைக்கப்பட வேண்டும். அனைத்து நடைமேடைகளிலும் போதுமான விளக்குகள், மின்விசிறிகள், இருக்கைகள், மேற்கூரைகள், நல்ல குடிநீர் வசதிகள் அமைக்கப்பட வேண்டும். அமிர்த் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் இதற்கான வசதிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’’ என்றனர். இத்திட்டத்தின் கீழ் தென்காசி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், கோவில்பட்டி, புனலூர், விருதுநகர், ராஜபாளையம், வில்லிபுத்தூர் உள்பட 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.