×

மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு: மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளில் அதிகளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மாவுப்பூச்சி தாக்குதல் காரணமாக மரவள்ளி சாகுபடி 60 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு மரவள்ளி டன்னுக்கு ரூ.8 ஆயிரம் வரை விலை போனது. தற்போது, டன் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை அரவை ஆலையினர் கொள்முதல் செய்வதால் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மாவுப்பூச்சி தாக்குதலால் மரவள்ளி சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இருப்பினும் மரவள்ளி கிழங்கு விலையானது கடந்த தை பொங்கல் பண்டிகைக்கு முன் ஒரு டன் ரூ.8 ஆயிரம் வரை விலை போனது. தற்போது, ஒரு டன் ரூ.10 ஆயிரம் விலை போவது மகிழ்ச்சி அளிக்கிறது. பாய்ண்ட் அடிப்படையில் முல்வேலி ரகம் 400 எனவும், தாய்லாந்து ரகம் 410 என்றளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. பிற மாநில வியாபாரிகள் உணவுக்காக மரவள்ளியை டன் ரூ.11,000 முதல் ரூ.11,500 வரை கொள்முதல் செய்கிறார்.

மரவள்ளியில் இருந்து தயாராகும் ஜவ்வரிசி 90 கிலோ மூட்டை ரூ.4,000ல் இருந்து ரூ.4,650 ஆகவும், அதேபோல், ஸ்டார்ச் மாவு 90 கிலோ மூட்டை ரூ.3,100ல் இருந்து ரூ.3,450 ஆக உயாந்துள்ளது.
மரவள்ளிக்கிழங்கு மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, மரவள்ளிக்கிழங்கு சாகுபடியை ஊக்குவிக்க தமிழக அரசு வேளாண் துறையுடன் சேர்ந்து மரவள்ளிக்கிழங்கு பயிரினை நோய் தாக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : cassava , Farmers are happy with the rise in cassava prices
× RELATED மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு