விபத்துக்களை தடுக்க அரூர்-சித்தேரி சாலையோர மரங்களை அகற்ற வலியுறுத்தல்

அரூர்: வாகன விபத்துக்களை தடுக்க, அரூர் - சித்தேரி சாலையோரம் இடையூறாக உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரூர்-சித்தேரி இடையே உள்ள 26 கி.மீ. தூர சாலையானது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அரூர்- சித்தேரி சாலையை சுமைதாங்கி மேடு, முத்துக்கவுண்டர் நகர், எல்லப்புடையாம்பட்டி, செல்வசமுத்திரம், குடுமியாம்பட்டி, கௌப்பாறை, ஈட்டியம்பட்டி, கீரைப்பட்டி, தாதரவலசை, வாழைத்தோட்டம், தோல்தூக்கி, சித்தேரி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அரூர் - சித்தேரி சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், அரூர் முதல் தாதராவலசை வரை 10.5 கி.மீ. தொலைவுக்கு, சுமார் ரூ11 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் முத்துக்கவுண்டர் நகர், கௌப்பாறை ஆகிய இடங்களில் சாலையோரம் 10க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இவை போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளன. இந்த மரங்களை அகற்ற வனத்துறை அனுமதிக்கவில்லை. இதனால் சாலையோர மரங்கள் உள்ள பகுதிகளை தவிர்த்து, அரூர் - கீரைப்பட்டி வரை 6 கி.மீ. தூரத்துக்கு தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விடுபட்ட இடங்களில் ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையில் பணிகள் நடக்காததால், குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோர மரங்களை அகற்றி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: