×

சென்னை இளங்கோ நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய டயாலிசிஸ் மையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு..!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட இளங்கோ நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய டயாலிசிஸ் மையத்தினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு: முதலமைச்சர் சென்னை மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பணியாற்றிய போது, சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டார்கள். சென்னை மாநகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து முழுவதும் அறிந்தவர் நம்முடைய முதல்வர்.

தற்போது கூட பல்வேறு துறைகளின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து சென்னையின் வளர்ச்சிக்காக நாள்தோறும் பணியாற்றி வருகிறார். பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.500 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்கியுள்ளார்கள். கடந்த ஆண்டு மட்டும் மாநகராட்சியில் ரூ.1000 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால்கள் அமைக்க நிதி ஒதுக்கினார்கள். இதேபோன்று, சென்னையின் அடிப்படைத் தேவைகளில் முக்கியப் பிரச்சினையாக உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் பணிகளுக்காக சென்னை குடிநீர் வாரியத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளார்கள்.

பல ஆண்டுகளாக உள்ள பழுதடைந்த கழிவுநீர் குழாய்களை மாற்றியமைக்கும் பணிகளும், சென்னையில் உள்ள 17 இலட்சம் வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை இல்லம் தேடி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் நாளொன்றுக்கு 1000 எம்.எல்.டி. அளவிற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கு சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையோடு 150 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். மேலும், 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த காலங்களில் பாசன பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகள் கண்டறியப்பட்டு அவற்றைத் தூர்வாரி, ஆழப்படுத்தி மழைநீரை சேகரித்து குடிநீர் ஆதாரமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். மேலும், பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்க தற்போது கூட சுமார் 736 நலவாழ்வு மையங்களை அமைக்க உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் 372 இடங்களில் சுமார் 3,732 இருக்கைகள் கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் சென்னையில் சாலை வசதி, மருத்துவச் சேவைகள், மழைநீர் வடிகால் பணிகள், தெருவிளக்குகள், குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் பணிகள் போன்ற அனைத்து விதமான அடிப்படைத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறார்.  அந்தவகையில், மாநகராட்சியோடு இணைந்து ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சைகளை அளித்து வரும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கிழக்கு மற்றும் டேங்கர் பவுண்டேஷன் நிறுவனங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இதுபோன்ற தன்னார்வலர்களின் பணிகளுக்கு அரசு தன்னுடைய முழு ஒத்துழைப்பை வழங்கும் என்பதனையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் பேசினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் டயாலிசிஸ் சிகிச்சைகள்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 140 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள் (UPHC), 16 நகர்ப்புர சமூக சுகாதார மையங்கள் (UCHC), 3 மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் தொற்று நோய் மருத்துமனை ஆகியவற்றின் மூலம் மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏழை மக்களின் நலனுக்காக 7 டயாலிசிஸ் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.  இந்த மையங்களில் மொத்தம் 80 டயாலிசிஸ் இயந்திரங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் தற்போது நாள்தோறும் 372 நபர்கள் டயாலிசிஸ் செய்து பயனடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு 33,525 டயாலிசிஸ் சுழற்சிகள் செய்யப்பட்டுள்ளன.

டயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவு மாண்புமிகு முதலமைச்சர்  காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (CMCHIS) மேற்கொள்ளப்படுகிறது.  காப்பீடு இல்லாதவர்களுக்கு டயாலிசிஸ் சேவை சென்னை மாநகராட்சியே வழங்குகிறது. இந்த டயாலிசிஸ் மையங்கள் சென்னை ரோட்டரி கிளப், டேங்கர் அறக்கட்டளை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து நிறுவப்பட்டுள்ளன.  மையங்களில் உள்ள டயாலிசிஸ் இயந்திரங்கள் ரோட்டரி சங்கங்களால் வழங்கப்படுகின்றன.  டயாலிசிஸ் மையங்கள் டேங்கர் அறக்கட்டளையால் இயக்கப்படுகின்றன.  

மேலும், டயாலிசிஸ் மையத்திற்கான இடம், மருத்துவ பராமரிப்பு, நீர், ஆய்வக ஆய்வு, மருத்துவக் கழிவு மேலாண்மை, மின்சாரம், பராமரிப்பு போன்ற சேவைகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 8வது டயாலிசிஸ் மையமாக தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-45, வியாசர்பாடி, இளங்கோ நகர், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் துணை சேவைகளுடன் இந்த டயாலிசிஸ் மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 12 டயாலிசிஸ் இயந்திரங்கள், ஆர்.ஓ. வடிப்பான்கள் மற்றும் பிற தேவையான துணைப் பொருட்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா வடசென்னை பாரளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர்,  துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, நிலைக் குழுத் தலைவர்கள் இளைய அருணா (நகரமைப்பு), சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்), சர்பஜெயதாஸ் (வரி விதிப்பு மற்றும் நிதி) அவர்கள், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், மண்டலக்குழுத் தலைவர் நேதாஜி கணேசன், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கிழக்கு நிர்வாகிகள் சீனிவாசராவ், ராம்குமார், ஸ்ரீதர், டேங்கர் பவுன்டேசன் நிர்வாகி லதாகுமாரசாமி, மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Minister ,K.K. ,Dialysis Centre ,Chennai Ilango ,N.N. Nehru , Minister K.N. Nehru inaugurated the new dialysis center set up in Ilango Nagar, Chennai..!
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...