சிவகாசி பகுதிகளில் இலைகள் கருகி வரும் வேப்ப மரங்கள்

சிவகாசி: சிவகாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வேப்ப மரங்கள் கருகி, இலைகள் உதிர்ந்து வருகின்றன. சிவகாசி பகுதியில் அண்மைக் காலமாக வேப்பமரங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிக அளவில் காய்ந்து கருகி வருகின்றன. வேம்பு எனப்படும் வேப்ப மரம் மூலிகை வகை மரமாகும். ஆலமரம், அரச மரத்தைப் போன்று அநேக ஆண்டுகள் வளரக்கூடியது வேப்ப மரம். வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இந்த வேப்பமரத்துக்கு பெண்கள் பூ, மஞ்சள், குங்குமமிட்டு வணங்குவார்கள். 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட இந்த மரம் வளரும். இது எப்பொழுதும் பசுமையாக இருக்கும். கிளைகள் அகலமாக அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரம்.

பொதுவாக வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும், அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதி மற்றும் மருத்துவ ரீதியிலான நன்மைகளை மக்கள் பெறுவார்கள். வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் அதிக குளிர் பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோஷ்ணம் தேவை. இதன் இலைகள் கசப்புத்தன்மையுடையது. கூர் நுனியுடைய இலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும், எண்ணெய் சத்துள்ள விதைகளையும் உடையவை வேப்ப மரம். இதன் பசுமையான நிழல் கருதி சாலையோரங்களில் அழகுக்காகவும், நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது.

இதன் எண்ணெயில் சோப்பு, மகளிர் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் புண்ணாக்கு உரமாகவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. விதைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக பெறப்படும் எண்ணெய் பல்வேறு நோய்களுக்கான மருந்தாக இருக்கிறது. எந்த வகை மண்ணிலும், கடும் வறட்சியிலும் பசுமையாக வளரும் இந்த வேப்பமரம் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் காய்ந்து கருகி வருவது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை. அதனால் வேளாண்மைத் துறையினர் இதுபோல் வேப்ப மரங்கள் கருகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: