×

சின்னாளபட்டி பகுதி மக்கள் கோரிக்கை ஏற்பு; அரசு மருத்துவமனையாக தரம் உயரும் சுகாதார மையம்: அமைச்சர் ஐ.பெரியசாமி நடவடிக்கை

சின்னாளபட்டி: சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இதன்படி கைத்தறி நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சின்னாளபட்டி மற்றும் சுற்றியுள்ள காந்திகிராமம், அம்பாத்துரை, செட்டியபட்டி ஊராட்சி உட்பட 47 கிராம மக்கள் சிகிச்சைக்காக 1972ம் ஆண்டு இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் 6 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவர் குடியிருப்பு உட்பட 16 குடியிருப்புகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டன. தற்போது இந்த கட்டிடங்கள் அனைத்தும் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் வெளிநோயாளிகள் வந்து செல்லும் பகுதிகள் மட்டும் அவ்வப்போது சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அவர்களின் சீரிய முயற்சியால் சுமார் ரூ.62 லட்சம் மதிப்பில் 30 படுக்கை அறைகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் எக்ஸ்ரே வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் திறக்கப்பட்டது. இதனால் சின்னாளபட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பயனடைகின்றனர். பின்னர் அதிமுக ஆட்சியில் சுகாதார மையத்தை தரம் உயர்த்தவோ அல்லது இடிந்த குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டவோ, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது பொதுமக்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் சின்னாளபட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து இதனை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சின்னாளபட்டி அரசு சமுதாய நல மைய அலுவலர் கூறும்போது, 1972ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்தில்தான் இன்று வரையிலும் பிசியோதெரபி மற்றும் இயற்கை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

அலுவலக குடியிருப்புகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடியிருப்புகளில் வசிக்காமல் செவிலியர்கள் உட்பட மருத்துவமனை பணியாளர்கள் பலரும் வெளியே வாடகை செலுத்தி வசித்து வருகின்றனர். இங்கு 5.5 ஏக்கர் நிலம் உள்ளது. அறுவை சிகிச்சை அரங்கமும் உள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் தலைமையில் சின்னாளபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர் என்றார். பொதுமக்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கை குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி கூறும்போது, தமிழகத்தில் திமுக ஆட்சியில் கல்வி, மருத்துவம், பொதுசுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த திமுக ஆட்சியின் போது 2010ம் வருடம் ஆத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளிகளும், உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாவும் தரம் உயர்த்தப்பட்டன. ரூ.62 லட்சம் மதிப்பில் 30 படுக்கைகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கம், எக்ஸ்ரே அறை வசதியுடன் சின்னாளபட்டி மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அனுமந்தராயன்கோட்டை ஊராட்சிப்பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் திறக்கப்பட்டது.

தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் மூலம் சின்னாளபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு மருத்துவமனையாக மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.  முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் இந்த கோரிக்கையை ஏற்றுள்ளதால், விரைவில் சின்னாளபட்டி சமுதாய நல மையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்றார்.

Tags : Chinnalapatti ,Minister ,I.Periyaswamy , Acceptance of demand of people of Chinnalapatti area; Health center to be upgraded as a government hospital: Minister I.Periyaswamy action
× RELATED ஐ.பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு 8ம் தேதி விசாரணை!!