சென்னை: மின்சாரம் திருத்த சட்டம் கொண்டு வருவதை திமுக அரசு ஏற்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் 2ம் நாள் நேர்காணல் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். அப்போது; உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒரு எழுச்சி வந்துள்ளது. இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செஸ் போட்டிகளை நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; 2கோடி 1லட்சம் பேர் ஆதாருடன் மின் இணைப்பு இணைந்துள்ளனர்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் ஜனவரி இறுதிக்குள் இணைக்க வேண்டும். மாதந்தோறும் மின்கட்டணம் என வரும் செய்தி முற்றிலும் தவறானது. மின்துறையை தனியாருடம் ஒப்படைக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ள மாட்டார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். மக்கள் முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
நோடாவுடன் போட்டிப்போடக்கூடிய கட்சிக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. விமான கதவு திறக்கப்பட்டது தொடர்பாக ஒன்றிய அமைச்சரே ஒப்புக்கொண்டார். விமான கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பொய் கூறுகிறார். ஏப்ரல் மாதம் வாட்சுக்கான பில் தருகிறேன் என கூறினார். ரஃபேல் கடிகாரத்துக்கான பில் கையில் இருந்தால் கொடுக்க வேண்டியது தானே எனவும் கூறினார்.