×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்குவது குறித்து ஓ. பன்னீர்செல்வம் அணி ஜன. 23-ம் தேதி முடிவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்குவது குறித்து ஓ. பன்னீர்செல்வம் அணி ஜன. 23-ம் தேதி முடிவு எடுக்கவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து திமுக கூட்டணி, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை உள்ளிட்ட பணிகளை தொடங்கி உள்ளனர். 27-ம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கூட்டணியில் யார் பெரியவர்கள் என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியால் தனித்தனியாக போட்டியிடக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிமுக எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, பாஜக ஆகியவை தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அதிமுக, தமாகா இடையே நடைபெற்று வந்த ஆலோசனையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.

அதிமுக வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்குவது குறித்து ஓ. பன்னீர்செல்வம் அணி ஜன. 23-ம் தேதி முடிவு எடுத்துள்ளது. சென்னையில் ஜன. 23-ல் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதா என்பது குறித்து ஓ. பன்னீர்செல்வம் அணி 23-ல் நடக்கும் கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளது. இன்று மாலை வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கு அதிமுக ஏற்பாடு செய்துள்ளது. ஒற்றை தலைமை விவகாரமும் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற சிக்கலும் உள்ள நிலையில் இடைத்தேர்தலை அதிமுக எதிர்கொள்கிறது.

Tags : Erode East Constituency ,Panneerselvam Team , About entering the field in the Erode East Constituency by-election. Panneerselvam Team Jan. Result on 23rd
× RELATED காய்ச்சல் பாதிப்பால் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி