தமிழ்நாடு அரசுக்கு நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து மீண்டும் கடிதம்: ஒன்றிய சுகாதார அமைச்சகம் அனுப்பியது

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு ஆளுநர் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தார். நீட் விலக்கு மசோதா குறித்து கடந்த ஆண்டே ஒன்றிய சுகாதார அமைச்சகம் தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில் தமிழக மருத்துவ துறையும் ஒன்றிய அமைச்சகத்துக்கு பதில் அளித்திருந்தது. கிட்டத்தட்ட 10 கேள்விகளை கேட்டிருந்தார்கள். அதில், எதற்காக நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று தமிழ்நாடு சுகாதார துறை ஒன்றிய அரசுக்கு விளக்கம் அளித்திருந்தது.

இந்த நிலையில் ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் தமிழ்நாடு மருத்துவ துறைக்கு நீட் விலக்கு மசோதா குறித்து ஒன்றிய அரசு மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

இதற்கு விரைவில் பதில் அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘ஏற்கனவே விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பி இருந்தது. அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மறு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்ட வல்லுநர்களின் கருத்தை பெற்று மீண்டும் மத்திய அரசுக்கு அடுத்த வாரம் பதில் அனுப்ப ஏற்பாடு செய்வோம்’ என்றார்.

Related Stories: