×

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ரத்து தமிழக காவல்துறை வாரிசுகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: தமிழக காவல்துறை வாரிசுகளுக்கு 10சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என அதிரடி தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவை ரத்து செய்து நேற்று ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக காவல்துறையினரின் மன உறுதியை அதிகரிக்கவும், விசுவாசம் மற்றும் நேர்மையை ஊக்கப்படுத்தவும் அவர்களுடைய வாரிசுகளுக்கு காவல் துறை வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் முறை தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அரசாணையும் அப்போது பிறப்பிக்கப்பட்டது. இதை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நூறு பேர் மேல்முறையீட்டு மனு  நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், அபாய் எஸ் ஒஹா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது  தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே,ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர் வாதத்தில்,‘‘ தமிழக காவல் துறை விவகாரத்தில் வழங்கப்பட்ட இந்த பத்து சதவீத இட ஒதுக்கீடு அரசாணை என்பது சரியானது. இதனை சரியான ஆய்வு செய்யாமல் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது என வாதிட்டனர். இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,‘‘தமிழக காவல்துறை வாரிசுகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய உத்தரவு மற்றும் அரசாணை என்பது செல்லும். அதன் அடிப்படையில் தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தவர்கள் உட்பட தகுதி வாய்ந்த அனைவருக்கும் பணி ஆணை வழங்கலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது. மேலும் இந்த வழக்கு விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 25 வயதுதான் தகுதி என்பதால் உயர் நீதிமன்ற உத்தரவால் வாய்ப்பிழந்தவர்களுக்கும் இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழக காவல்துறையில் பணி ஆணை வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.


Tags : High Court ,Madurai Branch ,Tamil Nadu Police ,Supreme Court , High Court's Madurai Branch order quashing Tamil Nadu Police's 10% reservation to heirs will go ahead: Supreme Court action verdict
× RELATED திண்டுக்கலில் பழமையான ஆலமரத்தை வெட்ட தடை