சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படும் புதுவையில் உயர் நீதிமன்ற கிளை: ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் பேச்சு

சென்னை: ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ல நீதிபதிகள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். புதுச்சேரியில் உயர் நீதிமன்ற கிளை அமைக்கப்படும்’ என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.13.79 கோடியில் வழக்கறிஞர்கள் அலுவலக அறைகளுக்கான கட்டிட அடிக்கல் நாட்டி வைத்து ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: ‘இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீதி விரைவாக வழங்குவதற்கு நீதிமன்றங்களில் தரமான 5ஜி சேவை வழங்கப்படும். கடந்த 2014ல் சான்றிதழ்களில் உயரதிகாரிகள் கையெழுத்து தேவையில்லை என்ற முறையை பிரதமர் மோடி நடைமுறைப்படுத்தினார். நீதித்துறைக்கு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் அரசு தரும்.

 

நீதிபதிகள் நியமனம் பற்றிய கொலிஜியம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய பிறகு எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுகின்றனர். அரசின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். இந்த கடிதத்தை, அரசியலமைப்பு பெஞ்சின் அடிப்படையில்தான் எழுதினேன். அரசும் கொலீஜியமும் ஒன்றிணைந்து நீதிபதிகள் நியமனத்துக்கான நடைமுறையை மறுசீரமைக்க வேண்டும் என்ற எண்ணம் தான். சிலர் இதை ஒரு பிரச்னையை பார்க்க முயல்கிறார்கள். நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் அமைப்புக்கு புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து சில நேர்மறையான நடவடிக்கைகளை நான் ஏற்கனவே எடுத்துள்ளேன்.

 

புதுச்சேரியில் உயர்நீதிமன்ற கிளை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்.  நீதித்துறைக்கும் சட்டங்களை இயற்றும் துறை மற்றும் நிறைவேற்றும் துறை ஆகியவற்றுக்கு ஒத்துழைப்பு அவசியம். ஜனநாயகத்தில் எந்த அமைப்பும் தனிமையாக செயல்பட முடியாது. இது ஜனநாயக நாடு. ஒருங்கிணைந்த சமூகம் தனிமையில் இருக்க முடியாது. வழக்குகளில் நீதி கிடைத்தாலும் அது தரமான நீதியாக இருக்க வேண்டும். இந்தியாவின் பழமையான நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றமும் ஒன்று. இங்கு காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 2047ல் இந்தியா தனது நூற்றாண்டை கொண்டாடும்போது, அனைத்திலும் வளர்ச்சி பெற்ற நாடாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories: