×

சாத்தூர், சிவகாசியில் அடுத்தடுத்து பயங்கரம பட்டாசு ஆலைகள் வெடித்து 3 பேர் கருகி பலி

சிவகாசி: சாத்தூர் மற்றும் சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த மாரியப்பனுக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே  கனஞ்சம்பட்டியில் உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பின் ராக்கெட் தயாரிக்கும் ஒரு அறையில் பட்டாசுகளுக்கான மருந்து செலுத்தும் போது உராய்வின் காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தீ ேவகமாக பரவி, 8 அறைகளும் தரைமட்டமாகின. தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் அங்கு பணியாற்றிய சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி, சாத்தூரை அடுத்த அமீர்பாளையத்தை சேர்ந்த சங்கர் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்து, சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து எஸ்.பி சீனிவாச பெருமாள் கூறுகையில், ‘‘உரிமம் இல்லாமல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆய்வு பணிகள் தீவிரப்படுத்தப்படும்’’ என்றார். இதேபோல், விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.கே.என்  ரோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (62) என்பவரின் பட்டாசு  ஆலை, சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ளது.

இங்கு 55 அறைகளில் 140க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  பணிபுரிந்து வருகின்றனர். நேற்று பட்டாசு உற்பத்தி செய்யும்  பணியின்போது, ஒரு அறையில் மருந்து செலுத்தும் போது உராய்வு  ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுமையாக இடிந்து  விழுந்ததில் திருத்தங்கல் மேலமாட வீதி  ரவி (60) என்ற தொழிலாளி உடல் கருகி பலியானார். சாமுவேல் ஜெயராஜ் (48) என்பவர் 70 சதவீத  தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து  விசாரிக்கின்றனர்.

Tags : Chattur ,Sivakasi , 3 people burnt to death in successive explosions of firecrackers in Chatur, Sivakasi
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு