×

தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய தலைவர்கள் பட்டியலை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது விமானம், போக்குவரத்து செலவுகள், கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள்  கணக்கில் சேராது. தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய தலைவர்கள் பட்டியலை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையைப் பெற, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும்,  பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும், தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய இந்தத் தலைவர்கள் பட்டியலை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கை வரும் 31ம் தேதியன்று வெளியிடப்படவுள்ளது. செலவுத் தொகையிலிருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் பிரசாரம் செய்யும் தலைவர்களின் பெயர்ப் பட்டியலைத் தெரிவித்து இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வரும் பிப்ரவரி 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயணச் செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திரத் தலைவர் பிரசாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer , List of leaders to be exempted from election expenses to be submitted within 7 days: Tamil Nadu Chief Electoral Officer notification
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...