×

அதிமுக எடப்பாடி, அதிமுக ஓ.பன்னீர்செல்வம், பாஜ கூட்டணியில் குழப்பம் நீடிப்பு தேர்தலில் தனியாக போட்டியிட எதிர்க்கட்சிகள் திட்டம்: ஜி.கே.வாசனுடன் அதிமுகவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை: கூட்டணியில் யார் பெரியவர்கள் என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியால், ஈரோடு கிழக்கு  சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.  இந்நிலையில், தமாகா தலைவர் வாசனுடன், எடப்பாடி அணியினர் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில் யுவராஜா போட்டியிட்டு ேதால்வி அடைந்தார். எனவே, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தமாகா போட்டியிட வேண்டும் என்று ஜி.கே.வாசன், கடந்த இரு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சூழ்நிலையில் தான், நேற்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பென்ஜமின், ஆகியோர் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, கூட்டணி தர்மத்தை மதித்து தமாகா போட்டியிட அதிமுக உதவ வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். ஆனால், தமாகாவால் பணம் செலவு செய்ய முடியாது. படுதோல்வியை சந்தித்தால் எதிர்க்கட்சிகளுக்கு அவமானமாக போய்விடும். இதனால், அதிமுக போட்டியிட வேண்டும் என்று எடப்பாடி தரப்பினர் வலியுறுத்தினர். அதேநேரத்தில் தமாகா போட்டியிட்டால் பாஜ போட்டியிடாது. அதிமுக போட்டியிட்டால் பாஜ போட்டியிடும் சூழ்நிலை ஏற்படும். அமித்ஷா, மோடி ஆகியோரிடம் நான் பேசுகிறேன் என்று ஜி.கே.வாசன் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால், இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமியிடம் பேசிவிட்டு வருவதாக அதிமுக தலைவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அதேநேரத்தில், அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு அதன் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை கிடைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் கூட்டணி தர்மத்தை மதித்து ஜி.கே.வாசனுக்கு விட்டு கொடுப்பார்களா அல்லது எடப்பாடி பழனிசாமி தனது பலத்தை நிரூபிக்க தனி சின்னத்தில் போட்டியிடுவாரா என்ற குழப்பம் அதிமுக கூட்டணியில் நீடித்து வருகிறது. அதேநேரத்தில் பாஜவும் தனித்துப் போட்டியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இதற்காக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளையும் அறிவித்துள்ளது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பிலும் வேட்பாளரை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருகிற 23ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் டிடிவி தினகரனும் போட்டியிடுவதா அல்லது பாஜ போட்டியிட்டால் ஆதரவு கொடுக்கலாம் என்று காத்திருக்கிறார். இதனால் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரு முடிவு எடுக்க முடியாத இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கின்றனர். பாஜவிலும் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அவரோ, இப்போது போட்டியிட்டு டெபாசிட் இழந்தால், கட்சித் தலைவர் பதவி போய்விடும் என்பதால், எதிர்கட்சிகள் மத்தியில் குழப்பம் நீடிப்பதால் அனைவரும் தனித் தனியாக போட்டியிடவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பு மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை. தமாகாவுக்கு விட்டு கொடுக்க ேவண்டும் என்று வாசன் கூறுகிறார். பாஜவுக்கு விட்டு கொடுக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜவுக்கு செல்வாக்கு கிடையாது.எனவே,, எடப்பாடி பழனிசாமி, தனது சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தி செலவு செய்வதையே விரும்புகிறார். அப்படி அவர் செய்தால் ஓபிஎஸ்சும் தனது சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த கூடும். இருவரும் இரட்டை இலை சின்னத்துக்கு விண்ணப்பித்தால் சின்னத்தை முடக்கும் நிலை தான் உருவாகும். இவ்வாறு பல்வேறு குழப்பங்கள் உள்ளன.

Tags : Edapadi ,O. Pannerselvam ,Baja ,Alliance ,G.P. ,Vassan , AIADMK Edappadi, AIADMK O. Panneerselvam, Confusion in BJP alliance Opposition plan to contest elections alone: AIADMK talks with GK Vasan fail
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு