போரூர் மேம்பால சந்திப்பு ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்: மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிக்காக நடவடிக்கை

சென்னை: மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமான பணி காரணமாக ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆவடி மாநகர காவல் ஆணையரக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாகவது: சென்னை- ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் போரூர் மேம்பால சந்திப்பு வரை, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமான பணி நடைபெற்று வருவதால், போரூர் மேம்பாலம் சந்திப்பில் தற்போதுள்ள போக்குவரத்து முறையில் 20.1.2023 முதல் 23.1.2023 வரை சோதனை ஓட்டமாக கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போரூர் மேம்பால சந்திப்பில் பூந்தமல்லி நோக்கி செல்லும் சர்வீஸ் சாலை மூடப்பட்டுள்ளது. எனவே, குன்றத்தூர் மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்ப இயலாது.

வாகனங்கள் வலதுபுறம் திரும்பி கிண்டி மார்க்கமாக செல்லும் சர்வீஸ் சாலையில் சென்று மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமகிருஷ்ணா சாலை சந்திப்பில்‘‘யூ டர்ன்” எடுத்து போரூர் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லலாம்.  

அதேபோல், குன்றத்தூர் மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பால சந்திப்பு வழியே பூந்தமல்லி நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் குன்றத்தூர் மெயின்ரோடு பாய்கடை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மாங்காடு சாலை வழியாக பூந்தமல்லி செல்லவும். குன்றத்தூர் மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பாலம் சந்திப்பு வழியே பூந்தமல்லி நோக்கி செல்லும் இருசக்கர வாகனங்கள், போரூர் சந்திப்பிற்கு முன்பே குன்றத்தூர் மெயின்ரோடு மசூதி தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மசூதிதெரு வழியாக சென்று மவுண்ட் பூந்தமல்லி சாலையை அடைந்து பூந்தமல்லி நோக்கி செல்லலாம்.

அதேபோல், வடபழனி மார்க்கத்திலிருந்து ஆற்காடு சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் ஆற்காடு சாலை  லட்சுமி நகர் 40 அடி சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மவுண்ட் பூந்தமல்லி சாலையை அடைந்து, போரூர் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லவும். ஆற்காடு சாலையிலிருந்து வரும் வாகனங்கள் போரூர் மேம்பாலம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பூந்தமல்லி நோக்கி செல்ல இயலாது. எனவே வாகனங்கள் இடதுபுறம் திரும்பி கிண்டி நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் சென்று மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமகிருஷ்ணா சாலை சந்திப்பில் ‘‘யூ டர்ன்” எடுத்து போரூர் மேம்பாலம் வழியாக செல்லலாம். வாகனங்கள் கிண்டி மார்க்கத்திலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலை வழியாக வந்து போரூர் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி செல்ல இயலாது.

எனவே, இந்த வாகனங்கள் போரூர் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லவும். பூந்தமல்லி மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக வந்து யூடர்ன் எடுத்து மீண்டும் பூந்தமல்லி நோக்கி செல்ல இயலாது. எனவே, வாகனங்கள் நேராக சர்வீஸ் சாலையில் சென்று மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமகிருஷ்ணா சாலை சந்திப்பில் யூடர்ன் எடுத்து போரூர் மேம்பாலம் வழியாக மீண்டும் பூந்தமல்லி நோக்கி செல்லவும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: