ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி

தண்டையார்பேட்டை: ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் குழாயில் சுகாதாரமற்ற கழிவுநீர் கலந்து வருவதால், சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெரு, செரியன் நகர்‌, தனபால் நகர், அசோக் நகர் உள்ளிட்ட 39வது வார்டு உள்பட பல இடங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. தற்போது, இந்த பகுதியில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இருந்தபோதும் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாய் என்பதால், இந்த குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எனவே, தினந்தோறும் இப்பகுதி மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல், அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும், பல்வேறு தொற்றுநோய், வயிறு உபாதை உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி குழந்தைகள், முதியோர் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய அவல நிலை நீடிக்கிறது. இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய குடிநீர் வாரிய அதிகாரிகளோ கண்டு கொள்ளவில்லை. ஒரு காலத்தில் குடிநீரை குடித்து பார்த்து நல்லா இருக்கா இல்லையா என்று பரிசோதனை செய்த காலம் போய், தற்போது குடிநீரை மோர்ந்து பார்த்து குடிநீர் நல்லா இருக்கிறதா இல்லையா என்று பரிசோதனை செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. இதுபோல், ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை என பல இடங்களில் 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாய் என்பதால் கழிவுநீர் கலந்து வருகிறது.

இதனை மாற்றி புதிதாக குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும் என்பது ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முக்கிய பிரச்னைகளாக மக்களிடையே உள்ளது. மேலும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றச்சாட்டினால் அதற்கு அப்போது டேங்கர் லாரி மூலம் குடிநீரை வழங்கி பிரச்னை செய்யும்போது தற்காலிகமாக சரி செய்து விடுகிறார்கள். இதனால், முழுமையாக தீர்க்க வேண்டிய இந்த பிரச்னை தீர்க்கப்படாமல் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இதே நிலை நீடித்து வந்தது. இதனை, தற்போது திமுக ஆட்சியில் மாற்றி பொதுமக்கள் சுகாதாரமற்ற கழிவுநீர் கலந்த குடிநீரை பயன்படுத்துவதை நிறுத்தி சுத்தமான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் வாரிய அதிகாரிகள் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஆர்கே நகர் தொகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Related Stories: