×

அடையாறில் மின் கசிவால் தீப்பிடித்து எரிந்த வீட்டில் 147 சவரன் நகை கொள்ளை? நண்பர்களிடம் போலீசார் விசாரணை

வேளச்சேரி: அடையாறில் தீப்பிடித்து எரிந்த வீட்டில் 147 சவரன் நகை மாயமானது. நகைகளை எடுத்து பத்திரமாக வைக்க சென்ற நண்பர்களே கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறு, காந்தி நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முகிலன் (35), கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் தனது குழந்தைகளை சொந்த ஊரான சேலத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கடந்த 13ம் தேதி தனது அபார்ட்மென்ட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றார்.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அவரது வீட்டில்  இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் முகிலனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். மேலும், அடையாறு போலீசார் மற்றும் திருவான்மியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அடையாறு ரோந்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். வீடு தீப்பற்றியது எப்படி என ஆய்வு செய்தனர். அப்போது, குளிர்சாதனப்பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், முகிலன் நன்மங்கலத்தை சேர்ந்த தனது நண்பர் ராஜிக்கு  போன் செய்து, பீரோவில் உள்ள நகைகளை எடுத்து சென்று அபார்ட்மென்ட் செகரட்டரி ஆலன்பாரதியிடம் கொடுத்து வைக்குமாறு கூறி உள்ளார். இதையடுத்து ராஜ் தனது நண்பர்கள் தீபன், தாமோதரன், சதீஷ்  ஆகியோரை அழைத்துக் கொண்டு முகிலன் வீட்டுக்கு வந்தார். பீரோவில் இருந்த நகைகளை எடுத்துச் சென்று ஆலன் பாரதியிடம் கொடுத்துள்ளார். அப்போது முகிலன் வீடியோ காலில் ஆலன் பாரதியிடம் பேசி நகைகளை காண்பிக்க சொல்லி சரிபார்த்துள்ளார். அப்போது பெரிய ஆரம் மற்றும் 10க்கும் மேற்பட்ட தங்க செயின்கள் உள்பட மொத்தம் 147 சவரன் நகைகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த 18ம் தேதி  இலங்கையில் இருந்து திரும்பிய முகிலன், அன்று இரவு அடையாறு போலீசில் புகார் கொடுத்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து,  தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று  வீட்டினுள் இருந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர், அதேபகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், முகிலன் மற்றும் அவரது நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும், அவர்களுடைய செல்போன் உரையாடல்கள், டவர் சிக்னல் ஆகியவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர். தீப்பிடித்த வீட்டில் இருந்து நகைகளை எடுத்துச்செல்ல நண்பர்கள் நகைகளை எடுத்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sawaran ,Adyar , 147 Sawaran jewels stolen from the house that caught fire due to electrical leakage in Adyar? Police interrogate friends
× RELATED மருமகனுடன் கள்ளக்காதலுக்கு இடையூறு...