குன்றத்தூர்: பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதால், மனமுடைந்த கல்லூரி மாணவன் தனக்குத்தானே நெஞ்சில் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார். இது, குன்றத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர், மணிகண்டன் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (40). இவரது மனைவி கெங்கையம்மா (40). இவர்களது மகன் பாலகிருஷ்ணன் (19). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், இவரது பெற்றோர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.
கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லாமல் மனைவி கெங்கையம்மாவுடன் பிரபாகரன் தகராறு செய்து வந்துள்ளார். இதை மகன் பாலகிருஷ்ணன் கண்டித்து வந்தார். இருந்தபோதிலும் பெற்றோரின் சண்டை மட்டும் ஓய்ந்தபாடி இல்லை. இதேபோல, நேற்று முன்தினமும் பெற்றோரிடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் தடுக்க முயன்றபோதும், சண்டை நிற்கவில்லை. இதனால், மனவேதனை அடைந்த பாலகிருஷ்ணன், வீட்டின் சமையல் அறைக்குச் சென்று, அங்கு காய்கறிகள் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, பெற்றோர் கண் எதிரிலேயே தன்னைத்தானே மார்பில் குத்திக் கொண்டு மயங்கி விழுந்தார்.
இதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரின் சண்டையால் மனவேதனை அடைந்த கல்லூரி மாணவன் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
