×

இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் வளர்க்கும் ஆட்சியாக தி.மு.க ஆட்சி உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

சென்னை: இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் வளர்க்கும் ஆட்சியாக தி.மு.க ஆட்சி உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (19.01.2023) சென்னையில் நடைபெற்ற 43-வது வழுவூரார் நாட்டியம் மற்றும் இசை விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது; என்னை அறிமுகப்படுத்தி உங்களிடத்திலே வெளிப்படுத்தியிருக்கக்கூடிய சகோதரர் சொல்லுகிறபோது, இந்த விழாவிற்கு நான் வந்த காரணத்தால் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று எடுத்துச் சொன்னார்.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் தெரிவிக்க விரும்புவது, இந்த விழாவிற்கு வந்திருக்கிற காரணத்தால் நான் மிகப்பெரிய அளவிலே பெருமைப்படுகிறேன் என்பதுதான் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன், அந்த உணர்வோடுதான் இந்த நிகழ்ச்சிக்கும் நான் வந்திருக்கிறேன்.
43-ஆவது வழுவூரார் நாட்டிய மற்றும் இசை விழாவில் கலந்துகொள்வதில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். நாட்டிய உலகமாக இருந்தாலும், இசை உலகமாக இருந்தாலும் அதில் வழுவூரார்  குடும்பத்திற்கு மகத்தான ஒரு இடம் உண்டு.

குடும்பம் குடும்பமாக - தலைமுறை தலைமுறையாக என்று சொல்வதைப் போல – இதைச் சொல்லுகிறபோது, அரசியலில் இருந்தால் வாரிசு என்று சொல்லி விடுவார்கள். அதை விமர்சனமும் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி, அதையெல்லாம் மீறி இன்றைக்கு இசைக்கும் நாட்டியத்திற்கும் தொண்டாற்றிய ஒரு குடும்பமாக வழுவூராருடைய  குடும்பம் விளங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்று சொன்னால், மாமன்னன் இராசராசசோழனின் மகள் குந்தவைக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த பாரம்பர்யம் வழுவூராரின் பாரம்பர்யம்!

தொண்டாற்றிய என்பதையும் விட - தொண்டாற்றிக் கொண்டு இருக்கக்கூடிய குடும்பம் தான் வழுவூராரின் குடும்பம்! மூத்த மகன், நாட்டிய கலா சாம்ராட் என்று போற்றப்பட்ட, சாம்ராஜ் அவர்கள். அதேபோல், இளைய மகன், இசை மற்றும் திரையுலகக் கலைஞரான மாணிக்கவிநாயகம் அவர்கள்.  குறிப்பாக, சாம்ராஜ் அவர்களின் வெண்கலக் குரலை, நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் அதிகம் விரும்பினார்கள். தலைவர் கலைஞர் அவர்களுடைய சங்கத்தமிழை இசைக் கோவையாக ஆக்கக்கூடிடய முயற்சியில் ஈடுபட்டவர் நம்முடைய சாம்ராஜ் அவர்கள்.

எந்தத் துறையாக இருந்தாலும், அதில் தனித்திறமைசாலிகள் அதிகமாக இருப்பார்கள். எத்தனையோ விருதுகளைப் பெற்றிருப்பார்கள். சாதனைகளைத் தனிப்பட்ட முறையிலும் செய்திருப்பார்கள். ஆனால், அந்தத் துறைக்கு தன்னைப் போலவே திறமைசாலிகளை உருவாக்கி இருப்பார்களா என்றால், அதிலே விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர்தான் அத்தகைய ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய மனிதர்களில் முக்கியமானவர்; இன்னும் சொன்னால் தலைசிறந்தவர், வழுவூர் பி.இராமையா அவர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தான் மட்டுமல்ல, தன்னைப் போலவே ஏராளமானவர்கள் வளரவேண்டும் என்ற பரந்த உள்ளத்தோடு அதற்காக அவர் செயல்பட்டவர்.

* நாட்டியப் பேரொளி பத்மினி அவர்கள்
* பத்மா சுப்பிரமணியம் அவர்கள்
* வைஜெயந்தி மாலா அவர்கள்
* சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்கள்

என அவர் உருவாக்கிய கலைஞர்களும் மாபெரும் கலைஞர்களாக நாட்டிலே வலம் வந்தவர்கள். இப்படி கலைஞர்களை உருவாக்கக் கூடிய  பரந்த உள்ளமானது அனைவருக்கும் வந்தாக வேண்டும். இதில் வழுவூரார் குடும்பத்துக்கு தனிப்பட்ட முறையில் நானும் நன்றி சொல்லக்கூடிய நிலையில்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். ஏனென்றால் இங்கே குறிப்பிட்டதைப் போல என்னுடைய மகள் செந்தாமரை - நாட்டிய கலா சாம்ராட் கலைமாமணி வழுவூர் சாம்ராஜ் அவர்களிடம் நாட்டியம் கற்றவர் என்பதை இங்கே சொன்னார்கள், அதிலே எனக்கு உள்ளபடியே பெருமை.  

ஏழுவயதில் இருந்தே செந்தாமரை நாட்டியம் கற்று வந்தார். தன்னுடைய ஒன்பதாவது வயதில் சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலியில் நடனம் ஆடியிருக்கிறார். 14.8.1996-ஆம் நாள் மியூசிக் அகாடமி ஹாலில் செந்தாமரையினுடைய நாட்டிய அரங்கேற்றமும் நடைபெற்றிருக்கிறது. மறைந்த தலைவர் அய்யா மூப்பனார் அவர்கள் தலைமையில், இசைஞானி இளையராஜா அவர்களுடைய முன்னிலையில் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை ஆற்றக்கூடிய அந்த விழா நடந்ததை நான் இன்றைக்கும் எண்ணிப் பார்க்கிறேன்.

அன்றைய நாள் சிறப்பாக செந்தாமரை அவர்கள் நாட்டியம் ஆடினார் என்று சொன்னால், அவரை மிகச் சிறப்பாக பயிற்றுவித்தவர் தான் ஆசிரியர் சாம்ராஜ் அவர்கள் என்பதுதான் உண்மை. தான் என்ன எதிர்பார்க்கிறாரோ, அதனை மாணவர்களிடம் கொண்டு வந்துவிடக் கூடிய ஆற்றலைப் பெற்றவராக அவர் விளங்கினார்.  பழைய பாடல்களை வைத்தே நாட்டியங்களை நடத்திக் கொண்டிருந்த காலத்தில், தமிழ் இலக்கியப் பாடல்களைப் புகுத்தி, அதற்கென நாட்டிய அசைவுகளை உருவாக்கி தமிழ்த் தொண்டாற்றியவர் வழுவூரார் அவர்கள். நாட்டிய மேடைகளைத் தாண்டி திரைத்துறையிலும் முத்திரை பதித்தார். மீரா திரைப்படத்தில் இடம்பெற்ற நடனக் காட்சிகள் அவர் அமைத்ததுதான். இவர் வாங்காத விருதுகள் இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு விருதுகளைப் பெற்றார்.

* இசைப் பேரறிஞர் விருது
* சங்கீத நாடக அகாடமி விருது
* பத்மஸ்ரீ   
* கலைமாமணி என அனைத்து விருதுகளையும் பெற்றவர்.

நாட்டியக் கலையை வளர்க்க வேண்டும். இதனை அரசோ, இதுபோன்ற அமைப்புகளோ மட்டுமல்ல, தனிமனிதர்களும் செய்தாக வேண்டும். வழுவூரார் அவர்கள், கலையின் தரம் குறையாமல் இருக்க வேண்டுமென்றால், கலைஞர்களும், ரசிகர்களும் இக்கலையின் பெருமையையும், கலையின் நுணுக்கங்களையும் ஓரளவிற்கு அறிந்திருக்க வேண்டிய அவசியம்.  கலைஞர்களாக உள்ளவர்கள் புத்தகங்களைப் படிப்பதனாலும், கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதனாலும் மாத்திரம் கலைஞர்களாகிவிட முடியாது. அநேக வருடங்கள் நல்ல குருகுலவாசம் செய்து அதைக் கற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லி இருக்கிறார்.

அந்த அடிப்படையில் கலை ஆர்வம் உள்ளவர்கள், கலைத் திறமை உள்ளவர்கள் நல்ல ஆசிரியர்களிடம் இக்கலைகளைக் கற்றுக் கொண்டு கலைகளை காலமெல்லாம் வளர்க்க துணை புரிய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் வளர்க்கும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கலைகள் என்பவை தமிழ்ப் பண்பாட்டைக் காலம் காலமாக வளர்த்தெடுக்கும் பணியைச் செய்து வருகின்றன. தமிழும் - தமிழ்நாடும் பல்லாயிரம் ஆண்டு காலம் நின்று நிலைக்க இத்தகைய கலை இலக்கியங்கள் தான் அடிப்படையான காரணம்.

எத்தனையோ படையெடுப்புகளை தமிழ்நாடு சந்தித்துள்ளது. அத்தனை படையெடுப்புகளையும் தாங்கி நின்று செழிக்க நமது கலை, இலக்கியங்கள்தான் காரணம். இந்திய விடுதலைக்காக வழுவூரார் அவர்கள் நாட்டியக் கலையை அன்றே பயன்படுத்தியதைப் போல இன்று இருப்பவர்களும் தமிழைக் காக்கவும், தமிழ்நாட்டைக் காக்கவும் தங்கள் கலையை பயன்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். புதிய புதிய கலைஞர்கள் உருவாகுவதைப் போல புதிய புதிய பாடல்களும் இந்த மேடைகளில் ஒலிக்க வேண்டும். நவீனக் கலையில் நவீனக் கருத்துகள் - அறிவுப்பூர்வமான கருத்துகள், பகுத்தறிவுக் கருத்துகள் - சமூக மேன்மைக்கும் மக்களை நல்வழிப்படுத்தும் கருத்துக்கள் இடம் பெற வேண்டும்.

நவீன வடிவங்களை மட்டுமல்ல, நவீன எண்ணங்களையும் இந்தக் கலையில் பயன்படுத்தப்பட வேண்டும். இங்கு கலைமாமணி கன்னியாகுமரி அவர்கள் இந்த ஆண்டு விருது பெற்றிருக்கிறார்கள். அவரையும் வாழ்த்துகிறேன். அவரே சொன்னார், நான் ஆந்திராவில் இருந்தாலும் ஏறக்குறைய 50 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழ்நாட்டிற்கு வந்து சேவை செய்து கலையைக் கற்று இப்படி ஒரு விருதை பெற்றிருக்கிறேன் என்று சொன்னால், இதற்குக் காரணம் தமிழ்நாடு தான் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆக, தமிழ்நாட்டினுடைய முக்கியத்துவம் இப்போது எல்லோருக்கும் தெரியும் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச்சொல்லி, அனைவருக்கும் நன்றி கூறி என் உரையை நிறைவு செய்கிறேன் இவ்வாறு கூறினார்.


Tags : stalin , The DMK regime is a regime that fosters harmony in art, music and drama: CM Stalin's speech..!
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...