×

தேரூரில் அறுவடை தொடங்கியது: கேரளாவிற்கு செல்லும் குமரி வைக்கோல்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என்று இருபோக சாகுபடி நடந்து வருகிறது. ஆற்றுபாசனம், குளத்து பாசனத்தை நம்பியே இந்த சாகுபடி நடந்து வருகிறது. மேலும் இருபருவமழையும் கைகொடுக்கும் நேரத்தில் மகசூல் அதிகரிப்பதுடன், லாபமும் அதிகமாக கிடைத்து வருகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது கும்பபூ சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த இருவருடமாக தேரூர் பகுதியில் சாகுபடி செய்யாமல் விவசாயிகள் இருந்தனர். அந்த பகுதியில் வால்ெநல் என்னும் களைமுளைப்பதால், சாகுபடியை புறக்கணித்து வந்தனர். இந்த வருடம் மீண்டும் நெல்சாகுபடியை தொடங்கியுள்ளனர்.

கும்பபூ சாகுபடி தேரூர், பறக்கை பகுதியில் முன்கூட்டியே நடந்ததால், தேரூர் பகுதியில் அறுவடை தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் அறுவடை தொடங்கப்பட உள்ளது. தற்போது நெல்கொள்முதல் நிலையத்தில் 100 கிலோ எடைகொண்ட நெல் ரூ.2015க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் நஷ்டம் இல்லாமல் போதிய விலை கிடைத்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முன்னோடி விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கை, தேரூர் பகுதியில் நெல்சாகுபடி முன்கூட்டியே தொடங்கும்.

கடந்த சில வருடங்களாக வால்நெல் பிரச்சனை, மற்றும் தண்ணீர் பிரச்சனை ஆகிய காரணங்களால் தேரூர் பகுதியில் நெல்சாகுபடி செய்யாமல் விவசாயிகள் இருந்து வந்தனர். தற்போது தேரூர் பகுதி விவசாயிகள் மீண்டும் நெல் சாகுபடியை தொடங்கியுள்ளனர். சாகுபடி செய்யப்பட்டு இருந்த கும்பபூ அறுவடை தொடங்கியுள்ளது. நெல்கொள்முதல் நிலையத்தில் ரூ.2015க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை தவிர தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் நேரடியாக வந்து 100 கிலோ நெல் மூடையை ரூ.1650 முதல் ரூ.1700க்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

இதனை தவிர வைக்கோலும் நல்ல விலைக்கு விற்பனையாகி வருகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் கிடைக்கும் வைக்கோல்களை வியாபாரிகள் ரூ.8400க்கு விலைக்கொடுத்து வாங்கிச்சென்றனர். தற்போது அறுவடை பறக்கையிலும் தொடங்கியுள்ளதால், வைக்கோல் விலை தற்போது குறைந்துள்ளது.
தற்போது ஒரு ஏக்கரில் கிடைக்கும் வைக்கோல் ரூ.7 ஆயிரத்திற்கு வியாபாரிகள் விலைகொடுத்து வாங்கிச்செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நெல், வைக்கோல் மூலம் லாபம் கிடைத்துள்ளது. இருப்பினும் அனைத்து பகுதிகளிலும் அறுவடை தொடங்கும்போது, நெல், வைக்கோல் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.

இதனை கருத்தில் ெகாண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்றார். விவசாயிகளிடம் இருந்து வைக்கோல்களை வாங்கும் வியாபாரிகள் கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர். மேலும் மாவட்ட தேவைகளுக்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.


Tags : Theroor ,Kerala , Harvest begins in Theroor: Kumari straw heading to Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...