×

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர், முகவர்கள் கணக்கில் சேராது: சத்யப்பிரதா சாகு

சென்னை: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர், முகவர்கள் கணக்கில் சேராது என சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி; மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 77-ல் செய்யப்பட்ட வழிவகைகளின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது.

இந்த சலுகையைப் பெற, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும், தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய இந்தத் தலைவர்கள் பட்டியலை, மேற்கண்ட சட்டப்பிரிவின் விளக்கம் 2-ன் உட்பிரிவு 1-ன்படி, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டதிலிருந்து 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 98 .ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கை 31.01.2023 அன்று  வெளியிடப்படவுள்ளது. செலவுத் தொகையிலிருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பெயர்ப் பட்டியலைத் தெரிவித்து இந்தியத் தேர்தல் ஆணையம் / தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 07.02.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயணச் செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திரத் தலைவர் பிரச்சாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது இவ்வாறு கூறினார்.


Tags : Satyaprata Saku , When leaders of political parties campaign, transport expenses are not included in the account of party candidates, agents: Satyapratha Sahu
× RELATED பீலா ராஜேஷ், சத்யபிரதா சாகு உள்ளிட்ட 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு