ரேஷன் அரிசி மூட்டைகள் தண்ணீருக்குள் வீசிய விவகாரம்: எமரால்டு அணையில் மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி நேரில் விசாரணை

ஊட்டி: ஊட்டி அருகே எமரால்டு அணையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி வீசப்பட்ட விவகாரம் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஊட்டி அருகே எமரால்டு அணையில் அண்ணா நகர், சுருக்கி பாலம் பகுதியில் அணைக்குள் நூற்றுக்கணக்கான சிறு சிறு மூட்டைகள் தண்ணீரில் வீசப்பட்டிருந்தன. கரையோரத்தில் இருந்த சில மூட்டைகளை பிரித்து பார்த்த போது, அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில் தலா 15 கிலோ எடை கொண்ட 100 மூட்டைகள் அணையில் வீசப்பட்டிருந்ததும், இவற்றின் மொத்த எடை 1,500 கிலோ என்பதும் தெரியவந்தது.

அதிகாரிகள் முன்னிலையில் அணையில் மூழ்கி இருக்கும் மூட்டைகளை வௌியே எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை 3 மணி வரை 82 மூட்டைகள் வெளியே எடுக்கப்பட்டன. குளிர் அதிகம் காணப்பட்டதால் மீதமுள்ள மூட்டைகளை மீட்கும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி கூறுகையில், ‘ரேஷன் கடைகளுக்கு பொதுவாக 50 கிலோ எடையில் சாக்கு மூட்டையில்தான் அரிசி விநியோகிக்கப்படுகின்றன. அணையில் இருந்து மீட்கப்பட்ட மூட்டைகள் தலா 15 கிலோ அரிசி கொண்ட பைகள் ஆகும்.

இருபுறமும் தைக்கப்பட்டுள்ளது. என்ன அரிசி என்பது என கண்டறிய முடியாதபடி நன்கு ஊறிப்போய் உள்ளது. இருப்பினும் ஆய்விற்காக அரிசி உணவு பாதுகாப்புத்துறை ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது’ என தெரிவித்தார். இதற்கிடையே, காவல் ஆய்வாளர் மேனகா தலைமையில் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன் மற்றும் காவலர்கள் அடங்கிய நீலகிரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர், மர்ம நபர்கள் யாரேனும் மொத்தமாக ரேஷன் அரிசியை வாங்கி அவற்றை கடத்தும் நோக்குடன் எடுத்து செல்ல முயற்சித்தபோது, சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக அணையில் வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: