×

நாட்றம்பள்ளி அருகே மாடு முட்டி வாலிபர் சாவு; அரசு வாகனங்கள் மீது கல்வீச்சு: 35 பேர் கைது; 2வது நாளாக போலீஸ் குவிப்பு

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே மாடு முட்டி வாலிபர் இறந்த நிலையில் அரசு வாகனங்களை கல் வீசி சேதப்படுத்தியதாக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் சுமார் 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கல்நார்சாம்பட்டியில் பொங்கல் பண்டிகையொட்டி மாடு விடும் விழா நேற்று நடந்தது. 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற இந்த விழாவைக்காண ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். குறிப்பிட்ட நேரத்தை கடந்து  விழா நடந்துகொண்டிருந்ததால் அதனை நிறுத்தும்படி விழா குழுவினருக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

அப்போது திடீரென சீறிப்பாய்ந்த காளை ஒன்று அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஜோலார்பேட்டை அடுத்த பெரியகம்மியம்பட்டு மேல் முஸ்லிம் தெரு பகுதியை சேர்ந்த தவுலத் மகன் முஷரப் (19) என்ற வாலிபரை முட்டித்தள்ளியது. இதில் படுகாயமடைந்த அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  பரிசோதித்த டாக்டர்கள், அந்த வாலிபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், வாலிபர் இறப்புக்கு தடியடிதான் காரணம் எனக்கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து கூட்டத்தை கலைக்க அதிவிரைவு படையினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு எஸ்பி பாலகிருஷ்ணன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் திடீரென போலீசார் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது கற்களை வீசினர். இதில் சப்-கலெக்டர் மற்றும் எஸ்.பி வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன.

இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 20க்கும் மேற்பட்ட ைபக்குகளை பறிமுதல் செய்தனர்.  இதனிடையே டிஐஜி முத்துசாமி சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். கல்வீச்சு சம்பவம் தொடர்பாக நாட்றம்பள்ளி போலீசில் தாசில்தார் குமார் புகார் அளித்தார். அதன்பேரில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தது, அரசு வாகனங்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ், நள்ளிரவு 35 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. முஷரப்பின் பெற்றோர் தனியாக நாட்றம்பள்ளி போலீசில் புகார் அளித்தனர்.

அதில், ‘மாடு விடும் விழாவில் பங்கேற்ற எங்களது மகன் மர்மமான முறையில் இறந்துள்ளான். அவனது சாவில் சந்தேகம் உள்ளது’ என தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் தனியாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். நாட்றம்பள்ளி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் இன்று 2வது நாளாக அதிவிரைவுப்படையினர் மற்றும் போலீசார் என சுமார் 200 பேர் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கல்நார்சம்பட்டியில் நடந்த சம்பவம் காரணமாக கசிநாயக்கன்பட்டியில் இன்று நடைபெறுவதாக இருந்த மாடுவிடும் விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பி தலைமையில் 100 போலீசார் விரைந்தனர்
இதனிடையே வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையில் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார் என மொத்தம் 100 பேர் இன்று கல்நார்சாம்பட்டிக்கு விரைந்தனர். அங்கு ஏற்கனவே உள்ள போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இறந்த வாலிபர் முஷரப் உடல் வைக்கப்பட்டுள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

இதற்கிடையே காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இன்று முகாமிட்டு நாட்றம்பள்ளி மற்றும் வேலூர் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி நேற்று முதல் நாட்றம்பள்ளியில் முகாமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Muthi Valibur Sawu ,Ratrampalli , Cow crushes youth near Nadrampalli; Stone pelting on government vehicles: 35 arrested; Police presence for 2nd day
× RELATED திருப்பத்தூர் நாட்றம்பள்ளி சண்டியூர்...