×

ஈரோடு கிழக்கு தொகுதியை தொற்றிக் கொண்ட தேர்தல் பரப்புரை: வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்க்கும் பணிகள் தொடக்கம்..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மின்னணு எந்திரம் சரிபார்ப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது. தொகுதிக்கு உட்பட்ட பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள், பெயர்கள், பதாகைகளை முழுமையாக மறைக்கும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே முதற்கட்டமாக 500 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இணைப்புகள் மற்றும் விவி பேர்ட் கருவிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஈரோடு மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு அவற்றின் இயங்கும் திறன் பரிசோதிக்கப்பட்டது. அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே ஈரோடு கிழக்கு தொகுதியை தேர்தல் பரபரப்பு தொற்றி கொண்டுள்ள நிலையில், அதிமுக ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறக்கப்படும் வேட்பாளர் குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசனையை தொடங்கியுள்ளன.


Tags : Erode East ,Constituency , Erode East Constituency, Election Campaign, Voting Machine
× RELATED பொய் மட்டுமே பேசி வரும் மோடியை...