ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்டவர்களிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஈரோடு:  ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அத்தொகுதிக்குட்பட்டவர்களிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 31ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 7ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. 8ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. 9ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெறப்படும்.

மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதையடுத்து அரசியல் கட்சியினர் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள், சிலைகள், பெயர், விளம்பர பலகைகள் போன்றவை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி அலுவலகம் எம்.ஜி.ஆர். மாளிகை என்ற பெயர் பலகை துணி கொண்டு மூடப்பட்டது.

மாநகராட்சி வளாகத்தில் இருந்த பல்வேறு கல்வெட்டுகள் பேப்பர் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. அலுவலக வளாகம், கூட்டரங்கம் போன்றவற்றில் இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியார் ஆகியோர் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. இது தவிர அரசின் திட்ட விழிப்புணர்வு பேனர்கள், டெண்டர்கள் உள்ளிட்ட விளம்பர நோட்டீஸ்கள் அகற்றப்பட்டன.  ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள தந்தை அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகள் துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஈரோடு அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள உள்ள காமராஜர், ஈவிகே சம்பத் ஆகியோரின் சிலைகளும் துணியால் முடி மறைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் கூறுகையில், ‘‘ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஈரோடு மாநகராட்சி வளாகம் உட்பட தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி சார்ந்த தலைவர்கள், பெயர், படங்கள் அகற்றவும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது’’ என்றார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து திமுக கூட்டணி, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை உள்ளிட்ட பணிகளை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அத்தொகுதிக்குட்பட்டவர்களிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் 2023, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளதால் ஈரோடு (கிழக்கு) தொகுதியில் உள்ள அனைத்து படைக்கல (துப்பாக்கி) உரிமதாரர்களும் அவர்களிடம் உள்ள படைக்கலன்களை (துப்பாக்கிகளை) உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களிலேயோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத கிடங்கு Armoury)களிலோ, படைக்கல சட்டம் 1959-ன் பிரிவு 29B-ன்படி ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டதற்கான ரசீது நகல்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டியது. தவறினால் படைக்கல சட்டம் 1959-ன் பிரிவு 30 ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Related Stories: