×

துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தி வந்த 8 கிலோ தங்கம் பறிமுதல்: 2 பேர் அதிரடி கைது

மும்பை: துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தி வந்த 8 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குருவி போல ஒரே நபருக்காக கமிஷன் பணத்துக்கு ஆசைப்பட்டு கடத்தி வந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். துபாயில் இருந்து அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக பிரிவு (டிஆர்ஐ) அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். துபாயில் இருந்து வரும் அனைத்து பயணிகளிடமும் தீவிரமாக சோதனையிட்டனர்.

இந்நிலையில் துபாயில் இருந்து வந்த டெல்லியை சேர்ந்த முகமது சுலைமான் என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அவரிடம் இருந்து 4 கிலோ 300 கிராம் தங்க பசை இருந்ததை கண்டுபிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடியே 40 லட்சம். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் மற்றொரு விமானத்தில் வந்த அப்துல் பாசித் என்பவரிடம் அதிகாரிகள் சோதனையிட்டனர். தனி அறையில் அவரது உள்ளாடைகளில் சோதனையிட்டபோது தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பிலான 4 கிலோ தங்க பசையை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குருவி போல ஒரே நபருக்காக துபாயில் இருந்து தங்கத்தை கமிஷன் பணத்துக்கு ஆசைப்பட்டு கடத்தி வந்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Dubai ,Mumbai , 8 kg of gold smuggled from Dubai to Mumbai seized: 2 arrested
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...