×

தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: தமிழ்நாடு எனும் பெயரை மாற்ற வேண்டும் என கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக கோரி மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அந்த கட்சியினர் முழக்கம் எழுப்பினர். அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடைஞ்சல் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனுப்பி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து துரோகம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்து நாகை மாவட்டம் கீழ்வேலூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் நலன்களுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் செயல்பாட்டை ஏற்க மறுத்து சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும் விருதுநகரில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், ஒன்றிய அரசு உடனடியாக அவரை திரும்ப பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், கும்பகோணம், திருச்செங்கோடு, ஸ்ரீவைகுண்டம், திருக்கோவிலூர், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : Congress ,Governor ,Ravi ,Tamil ,Nadu , Tamil Nadu, Governor Ravi, Congress Party, Demonstration
× RELATED பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து...